பொன்னையன் பாஜகவை விமர்சித்தது மாபெரும் தவறு - கரு.நாகராஜன் ஆவேசம்
அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பாஜகவை விமர்சனம் செய்தது மாபெரும் தவறு என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசை விமர்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியாக இதுவரை அதிமுக இருந்து வந்த நிலையில் தற்போது அந்த இடத்தை பாஜக தட்டிப்பறித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாள்தோறும் திமுக மீது விமர்சன கணைகளை வீசிவருவதால் முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழக ஊடங்களிலும், நாளிதழ்களிலும் பாஜக தலைப்புச்செய்தியாக மாறி வருகிறது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியை போல் பாஜக செயல்பட்டு வருவது அதிமுக நிர்வாகிகளிடையே அடிக்கடி சலசலப்பை ஏற்படுத்தி வந்தாலும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் திடீரென பகிரங்கமாக அதிமுகவை விமர்சித்து பேட்டியளித்தார்.
‘தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. ஆனால், ஏதோ ஒரு நூறு பேரை, ஆயிரம் பேரைக் கூட்டி ஒரு போராட்டத்தை நடத்துவதால் மட்டும் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாற முடியாது, வளரவும் முடியாது. எதிர்கட்சி அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் போராடினால் மட்டும் போதாது, கட்சிக்கென்று கொள்கைகள் இருக்க வேண்டும். தமிழகத்தில் எல்லோரும் இந்தியை, சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலை மத்திய அரசு சட்டரீதியாக மேற்கொள்ளும்போது, அதை மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள்.
இதற்கு உதாரணம் நீட் தேர்வு. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் இத்தேர்வில், நமது மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் வட மாநிலத்தவர்கள் தமிழகம் வந்து நீட் தேர்வுக்கு படித்து, அதில் வெற்றியும்பெற்று, தமிழக மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்க வழிவகை செய்துவிட்டது. இதை வன்மையாக கண்டிக்கிறது அதிமுக’ என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.
பொன்னையனின் இந்த பேச்சு அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பொன்னையனை குறிவைக்கிறதா தமிழக பாஜக ?
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொன்னையன் தெரிவித்தது அவரது சொந்த கருத்து என கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் பொன்னையன் பாஜகவை விமர்சனம் செய்தது மாபெரும் தவறு என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது:-
தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளில் பாஜக முன்னின்று போராடி வருகிறது. பொன்னையன் நாளிதழ், செய்தித்தொலைக்காட்சிகளை எல்லாம் பார்க்க மாட்டாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பா.ஜ.க.வை விமர்சனம் செய்தது மாபெரும் தவறு. அவர் இ.பி.எஸ், ஓபிஎஸ் ஆகியோரிடம் சொல்லிட்டு தான் இந்த கருத்தை கூறினாரா? என விளக்கம் அளிக்க வேண்டும். தேசிய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் பங்கேற்பதில்லை. அதனால் தான் வடமாநிலத்தவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி அதிகளவில் பயனடைகின்றனர்.
எனவே, மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் யாரும் இல்லை என கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேர்வுகளை எழுதினால் தான் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு கரு.நாகராஜன் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe