முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஆட்சி நிர்வாகங்களையும், செயல்பாடுகளைக் குறித்தும் ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைக்கும் எதிர்கட்சியாக இப்போது யார் இருக்கிறார்கள் என்பதே பொதுவான கேள்வி. எதிர்கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுகவைக் காட்டிலும், அதிகளவில் பாஜகவினர் எதிர்கட்சியைப் போல செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அதிமுகவுக்குள்ளேயே சலசலப்பு ஏற்பட்டது.
கட்சித் தலைமையை சசிகலாவிடம் ஒப்படைக்குமாறு இரண்டாம் கட்டத் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசும் நிலை வந்தது. இந்த இக்கட்டான சூழலில், அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் அளித்த பேட்டி மீண்டும் அரசியல் தளத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க |ஏழு பேரும் குற்றவாளிகள் மட்டுமே.! - அண்ணாமலை ஆவேசம்
‘தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. ஆனால், ஏதோ ஒரு நூறு பேரை, ஆயிரம் பேரைக் கூட்டி ஒரு போராட்டத்தை நடத்துவதால் மட்டும் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாற முடியாது, வளரவும் முடியாது. எதிர்கட்சி அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் போராடினால் மட்டும் போதாது, கட்சிக்கென்று கொள்கைகள் இருக்க வேண்டும். தமிழகத்தில் எல்லோரும் இந்தியை, சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலை மத்திய அரசு சட்டரீதியாக மேற்கொள்ளும்போது, அதை மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள்.
இதற்கு உதாரணம் நீட் தேர்வு. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் இத்தேர்வில், நமது மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் வட மாநிலத்தவர்கள் தமிழகம் வந்து நீட் தேர்வுக்கு படித்து, அதில் வெற்றியும்பெற்று, தமிழக மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்க வழிவகை செய்துவிட்டது. இதை வன்மையாக கண்டிக்கிறது அதிமுக’ என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.
பொன்னையனின் இந்த பேச்சு அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னையனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, ராஜ்யசபா எம்.பி.,பதவி கிடைக்காததால் பொன்னையன் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால்தான் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டு உரிமைகளுக்காக போராடும் கட்சி பா.ஜ.க என்றும் அவர் பதில் அளித்தார். அ.தி.மு.க உறுப்பினர்களைவிட பா.ஜ.க உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றும், தாங்கள் யாருடைய தயவு தாட்சண்யத்திலும் வளர வேண்டிய அவசியம் கிடையாது என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | ‘ஸ’ தமிழ் எழுத்தா ? - அண்ணாமலை பகிர்ந்த தமிழ்த் தாய் ஓவியத்தில் மற்றொரு சர்ச்சை
தங்களுடைய நடத்தையால், செய்கையால் பாஜக வளர்வதாகவும் வி.பி.துரைசாமி கூறினார். அதுமட்டுமல்லாமல், கூட்டணி தர்மம் என்றுகூட பாராமல் பாஜகவை பொன்னையன் விமர்சித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மீண்டும் பொன்னையன் அளித்த பேட்டி இன்னும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழ்நாடு பா.ஜ.க நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அ.தி.மு.க-வினர் வெளிப்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசினார் பொன்னையன். தமிழ்நாட்டிற்காக பாஜக தங்களுடைய கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்குப் பதில் அளித்துள்ள பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பாஜக பற்றிப் பேச பொன்னையனுக்கு தார்மிக உரிமை இல்லை என்று விமர்சித்துள்ளார். ராசிபுரத்தில் பேசிய துரைசாமி, 65 எம்.எல்.ஏக்கள் உள்ள அதிமுக சட்டமன்றத்தில் ஊழல் பற்றி பேசமாட்டார்கள் என்றும், ஒருவேளைப் பேசினால் ரெய்டு வந்துவிடுமோ என்ற பயப்படுவதாகவும் காரசாரமாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அரைவேக்காடு அண்ணாமலை - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR