தமிழ்நாட்டில் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள தடுப்பூசிகளின் துணையுடன் கொரோனா வைரஸ் பாதிப்பை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ள நிலையில், பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. தமிழ்நாடு எதிர்நோக்கியுள்ள பேராபத்தைக் கட்டுப்படுத்த விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் (England) உருமாறிய கொரோனா வைரஸ் (Coronavirus) அங்கிருந்து பிரான்ஸ், ஹாலந்து, ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் உள்ளிட்ட40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் திசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா, வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 13 பேர் உருமாறிய கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படா விட்டால், அடுத்த சில வாரங்களில் புதிய கொரோனா மிக வேகமாக பரவுவதைத் தடுக்க முடியாது.


ALSO READ | நாக்பூர் நபர் மூலம் இந்தியாவில் நுழைந்துவிட்டதா புதிய வகை கொரோனா வைரஸ்?


இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ள புதிய கொரோனா (New strain coronavirus), சாதாரணமான கொரோனாவை விட 70% கூடுதல் வேகத்தில் பரவும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனில் உருமாறிய கொரோனா, முதல் முறையாக உருமாறவில்லை. மாறாக, 20-க்கும் மேற்பட்ட முறை உருமாறிய பிறகு தான் மிகவும் தீவிரமான நிலையை அடைந்திருக்கிறது. இந்த வகை கொரோனா மிகவும் எளிதாகவும், உறுதியாகவும் பரவுகிறது என்பதால் மிகக்குறுகிய காலத்தில், மிக அதிகமான மக்களைத் தாக்கக்கூடும். அதற்கு சிறந்த உதாரணம் இங்கிலாந்து தான். சில வாரங்களுக்கு  முன் மிகக்குறைந்த எண்ணிக்கையில் பரவி வந்த புதிய கொரோனா, இப்போது இன்னும் தீவிரமாக  பரவத் தொடங்கியுள்ளது. அதன்விளைவாக இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக ஏற்படக்கூடிய  கொரோனாத் தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 60 ஆயிரத்திற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.


இத்தகைய சூழலில் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். புதிய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான விமான சேவை கடந்த திசம்பர் 23-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் இன்று வரை இங்கிலாந்தில் நிலைமை சீரடையாத சூழலில், நாளை முதல் இங்கிலாந்துக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது மிகவும் தவறான முடிவு. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்குத் தான் இந்த நடவடிக்கை வழி வகுக்கும்.


நாளை முதல் இங்கிலாந்து விமானங்கள் அதிக எண்ணிக்கையில்  சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வந்து செல்லத் தொடங்கும் நிலையில், இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வரும் விமானப் பயணிகளுக்கு கொரோனா சோதனையை தீவிரப் படுத்தவும், பயணிகளை குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கவும் வசதி செய்யப்பட வேண்டும். இதற்காக தனி மருத்துவக் குழுக்களை அமைக்க வேண்டும்.


இங்கிலாந்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா சோதனை செய்வதைக் காட்டிலும், அவர்களுக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய வேண்டியது தான் முதன்மைத் தேவை ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் அத்தகைய சோதனை நடத்துவதற்கான வசதி இல்லை என்பது தான் வேதனையான உண்மை ஆகும். கொரோனா சோதனை செய்வதற்கான ஆய்வகங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்றாலும் கூட, உருமாறிய கொரோனா தொற்றை கண்டுபிடிப்பதற்கான ஆய்வகங்கள் தமிழகத்தில் ஒன்று கூட இல்லை. இத்தகைய ஆய்வகங்கள் பெங்களூர், ஐதராபாத், தில்லி, புனே ஆகிய நகரங்களில் தலா 2, புவனேஸ்வரம், கொல்கத்தா ஆகிய நகரங்களில் தலா 1 என மொத்தம் 10 உள்ளன. தமிழகத்தில் எடுக்கப்படும் மாதிரிகளை இந்த ஆய்வகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்பி சோதனை செய்து தான் முடிவுகளை அறிய முடியும். இதில் ஏற்படும் தாமதமே   புதிய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தேவையற்ற பின்னடைவை ஏற்படுத்தி விடும். எனவே, மத்திய அரசிடம் பேசி உருமாறிய கொரோனா தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வகத்தை சென்னையில் உடனடியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.


ALSO READ | 8 ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய புதிய வகை கொரோனா வைரஸ்: WHO


மற்றொருபுறம் புதிய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிப்பது கொரோனா வைரஸ் பரவலை வேகப்படுத்தும். இது சரியான நடவடிக்கை அல்ல. திரையரங்குகளில் 50%க்கும் மேல் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், அதை ஏற்று, திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை கைவிட வேண்டும்.


இதற்கெல்லாம் மேலாக மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. எனவே, புதிய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை நன்றாகக் கழுவுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கைகளை கடைபிடித்து புதிய கொரோனா பரவலைத் தடுக்க துணை நிற்க வேண்டும் என்றார்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR