தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு தஞ்சையில் நூதன முறையில் எதிர்ப்பு!
பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சி மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டு திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் தமிழர்கள் இருக்கும் சிவமோகா பகுதியில் பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாக்கு சேகரிக்க சென்றனர். சிவமோகா மாவட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். சிவமோகா தமிழ் சங்கம் புலம்பெயர்ந்த கன்னட தமிழர்கள் இடையே பிரபலமான தமிழ் சங்கமாக திகழ்ந்து வருகிறது. இதனிடையே வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற சிவமோகா நகரில் தமிழர்களை வைத்து ஆதரவு பிரச்சார கூட்டம் பாஜக கட்சி சார்பில் நடத்தப்பட்டது. அப்போது , அங்கு தமிழர்கள் அதிகம் இருந்த காரணத்தால், மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டு திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது.
மேலும் படிக்க | ஆருத்ரா மோசடி வழக்கில் பாஜகவினரின் தொடர்பு பற்றி விசாரணை!
பின்பு, பெண்கள் யாராவது இங்கு வந்து கன்னட நாட்டு கீதத்தை பாடும்படி அவர் வலியுறுத்தினார். இதனையடுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்த தமிழர்கள் ஒலிபெருக்கி மூலமாக கன்னட நாட்டின் கீதத்தை பாட வைத்தனர். தேர்தல் களத்தில் தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்க வந்த பாஜக கட்சித் தலைவர்கள், குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், தமிழ் தாயை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ் தாய் வாழ்த்து பாதியில் நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழ் ஆர்வலர்களும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவும் இந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தது. தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழியும் டிவிட்டரில் அண்ணாமலைக்கு இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்திருப்பதுடன், தமிழ்தாயை இழிவுபடுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் “எட்டுத்திக்கும் பரவட்டும் தமிழ்த்தாய் வாழ்த்து“ என்ற தலைப்பில் கோலப்போட்டி நடத்தப்பட்டது. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சேகர் காலனியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர் – சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 100 பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று தமிழ்த்தாயின் சிறப்புகளை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் தத்தமது வீட்டின் முன் வண்ண வண்ண கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். “தமிழ்த்தாய் – தவறிழைக்கும் தலைவரையும் பணிய வைப்பாள் , தமிழ்த்தாய் – தமிழருக்கு தனிப்பெரும் தாய் அவள் , தீந்தமிழ் தந்த தமிழ்த்தாய், இன்பத்தமிழ் தந்த தமிழ்த்தாய் , நற்றமிழ் தந்த தமிழ்த்தாய், பொற்றமிழ் தந்த தமிழ்த்தாய் ” உள்ளிட்ட தமிழ்த்தாயை போற்றும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய கோலங்களை பெண்கள் வரைந்திருந்தனர்.
கோலப்போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் ஜோதி அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு தஞ்சையில் கோலப்போட்டி மூலம் நூதன முறையில் மொழியுணர்வு மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ