கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் வேலை இழந்து நாடு திரும்பிய தமிழர்க்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு வங்கிகள் மூலமாகவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலமாகவும் கடன் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.. "கொரோனா வைரஸ் பரவல் (Coronavirus) பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய இரண்டரை லட்சம் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப் பட்ட மறுவாழ்வு நடவடிக்கைகள் பல மாதங்களாகியும் இன்னும் முழுமை பெறவில்லை.


சீனாவிலிருந்து கடந்த ஆண்டு இறுதியில் உலகின் பல நாடுகளுக்கு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் (COVID-19) அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.  அவர்களில் தமிழகத்தைச் (Tamil Nadu) சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஒரு புறம் கொரோனா வைரஸ் பரவல் அச்சம், மறுபுறம் வேலையிழப்பு என இருவகை தாக்குதலுக்கு ஆளான தமிழகத்தைச் சேர்ந்த 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 47 நாடுகளில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் தாயகத்திற்கு திரும்பியுள்ளனர்.


ALSO READ | விவசாயத்தில் ஒரு யுகப்புரட்சி - விவசாயத்திற்கு விவசாயியே தீர்வான கதை


தாயகம் திரும்பிய தொழிலாளர்கள் அனைவருமே கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், மரவேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்ட குறைந்த ஊதியம் (Low Salary) பெறும் பிரிவினர் தான். தமிழகத்திலும் கொரோனா பாதிப்பால் பொருளாதார மந்தநிலை நிலவுவதால் தாயகம் திரும்பிய அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஏற்கனவே அவர்கள் வெளிநாடு செல்ல கடன் வாங்கியுள்ளனர். அந்தக் கடனையே அடைக்க முடியாமல் தடுமாறி வந்த அவர்களுக்கு வேலையிழப்பு கூடுதல் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. தாயகம் திரும்பிய நிலையில் இங்கும் வேலைவாய்ப்புகள் இல்லை என்பதால் குடும்பச் செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டியுள்ளது. இன்னும் சில மாதங்கள் இதே நிலை நீடித்தால் அந்த தொழிலாளர்கள் மீள முடியாத கடன் சுழலில் சிக்கிக் கொள்வார்கள். அத்தகைய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவதை தடுக்க வேண்டியது தமிழம் அரசின் (Tn Govt) முதன்மைக் கடமையும், பொறுப்பும் ஆகும்.


வெளிநாடுகளில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தொழிலாளர்களின் துயரைத் துடைக்க அடிப்படைத் தேவை அவர்களுக்கு வேலைவாய்ப்பு (Job Offer) வழங்குவது தான். அதற்கான நடவடிக்கைகளை வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையம் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை உதவியுடன் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலமாக தொழில்கடன் பெற்றுத்தரவும் ஆணையத்தின் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை.


வேலையிழந்து கடன் சுமையில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதில் செய்யப் படும் ஒவ்வொரு நாள் தாமதமும் அவர்கள் வாழ்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும். தமிழக அரசு (Tamil Nadu Govt) நினைத்தால் சாத்தியமுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியும். வெளிநாடுகளில் இருந்து திரும்பிய தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், இராமநாதபுரம்  ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அந்தப் பகுதிகளில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறிய பின்னடைவுக்குப் பிறகு மீண்டும்  செயல்படத் தொடங்கியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த வெண்மணியாத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் வளாகங்கள் அமைக்கப்பட்டு  வருகின்றன. அதற்கான பணிகளில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.


ALSO READ | இன்று மலர்கிறது மயிலாடுதுறை மாவட்டம்: நிர்வாக செயல்பாடுகளை துவக்கி வைக்கிறார் EPS


சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு வங்கிகள் மூலமாகவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலமாகவும் கடன் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அங்கு ஏற்கனவே பணியாற்றி வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியுமா? என்பதை அங்குள்ள இந்திய தூதரங்கள், தமிழக அரசின் வெளிநாட்டு மனிதவளக் கழகம் ஆகியவற்றின் மூலம் அறிந்து அவர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தர நடவடிக்கை  எடுக்க வேண்டும். அவர்களுக்கான விமானக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்க வேண்டும்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR