ஐயா.. ஐயா தான்... சமாதானத்தில் முடிந்த பாமக சர்ச்சை... பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
PMK Ramadoss Anbumani: பாமக தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் இடையே ஏற்பட்ட பிரச்னை தற்போது சமாதானத்தில் முடிந்துள்ளது. அந்தவகையில், பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன என்பதை இங்கு காணலாம்.
PMK Ramadoss Anbumani Latest News Updates: புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று (டிச. 28) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர்.
கூட்டம் துவங்கியதும் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறப்பிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சியின் தலைவர் அன்புமணி பேசியபோது,"2025ம் ஆண்டு நாம் அர்ப்பணிப்போடு பணியாற்றினால் 2026ஆம் தேர்தலில் வெற்றி பெறுவோம். 2019ம் ஆண்டு நாம் எடுத்த தவறான முடிவால் மீண்டு வரமுடியவில்லை.
ராமதாஸ் vs அன்புமணி
2026ஆம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான். அக்கூட்டணியில் பாமக இருக்கும். பேனரில் அய்யா படம் மட்டும் போடுங்கள். என் படம் உள்பட யார் படமும் போடவேண்டாம். இதற்காக கட்சியில் குழப்பம் விளைவிக்க வேண்டாம்" என்று அவர் கூறியதுமே கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்பு பொதுக்குழுவில் அதானி ஊழல் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிக்க | பதவியை ராஜினாமா செய்யும் அன்புமணி? தைலாபுர தோட்டத்தில் பேச்சுவார்த்தை!
இதைத்தொடர்ந்து பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணிக்கு துணையாக முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். அதற்கு உடனே அன்புமணி,"கட்சியில் சேர்ந்த 4 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுப்பது என்ன நியாயம்?. அவருக்கு என்ன அனுபவம் இருக்கும், களத்தில் இருத்து வேலை செய்வதற்கு?" என சற்றும் தாமதிக்காமல் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
கட்சியில் குடும்ப முரண்?
இதனால் கோபமடைந்த டாக்டர் ராமதாஸ்,"நான் சொல்வதைதான் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது. கட்சியை விட்டு போவதாக இருந்தால் வெளியே செல்லுங்கள், வேண்டுமென்றால் வெளியே போ" என ஆவேசமாக கூறினார். "நீங்கள் சொல்லுங்கள். பண்ணுவதை பண்ணுங்கள்" அன்புமணி பேச, இருவரின் வார்த்தை மோதலால் மேடையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே தான் புதிதாக சென்னை பனையூரில் அலுவலகம் அமைத்திருப்பதாகவும், தன்னை சந்திக்க விரும்புபவர்கள் அங்கு வந்து சந்திக்கலாம் எனவும் கூறினார். இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்திற்கு வெளியே இரு தரப்பு ஆதரவாளர்களும் மாறி மாறி கோஷமிட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
ஆனால் இந்த தந்தை மகனுக்கு இடையேயான முரண்பாட்டை கட்சி ரீதியாக முக்கிய நிர்வாகிகளும், குடும்ப ரீதியாக உறவினர்களும் விரும்பவில்லை. உடனடியாக இதை முடிவுக்கு கொண்டுவர நிர்வாகிகளும் உறவினர்களும் இருவரிடத்திலும் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
முகுந்தன் விலகல்...
இதன் விளைவாக இன்று காலை 11 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் தந்தையும், பாமக நிறுவனமான டாக்டர் ராமதாஸை, அன்புமணி சந்திக்க இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் காலை 11 மணி வரை அன்புமணி ராமதாஸ் சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்படவில்லை.
இதற்கிடையே முகுந்தன் பரசுராமன் தற்போது வகித்து வரும் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் நேற்று ராமதாஸ் அறிவித்த மாநில இளைஞர் அணி தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் பாமகவின் சாதாரண உறுப்பினராக தான் தொடர இருப்பதாகவும் பரசுராமன் தரப்பில் இருந்து ஒரு தகவலானது வெளியானது.
அதே நேரத்தில் டாக்டர் ராமதாஸும் இதே முடிவை எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியது. இந்த இருவரின் மனமாற்றத்திற்கும் குடும்ப உறுப்பினர்களின் சமாதானமும் குறிப்பாக ராமதாஸின் மனைவி சரஸ்வதி அம்மாள் முக்கிய காரணமாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல்கள் வெளியாக்கிய பின் தான் அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து தைலாபுரம் கிளம்பிச் சென்றார்.
அன்புமணி - ராமதாஸ் சமாதானம்
சென்னையில் இருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தடைந்த அன்புமணி தந்தையும் பாமக நிறுவனமான ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி கே மணி உள்ளிட்ட பாமக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை மற்றும் சமாதான கூட்டமானது சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ்,"அய்யாவுடன் கட்சியின் வளர்ச்சி சட்டமன்ற தேர்தல் மாநாடு பற்றி குழுவாக விவாதித்தோம். இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டு. மக்கள் விரோத ஆட்சி இதை அகற்ற வேண்டும் என்பதற்கே, ஜாதி வாரி கண்கெடுப்பு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு பெறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து விவாதித்தோம். இது ஜனநாயக கட்சி, பொதுக்குழுவில் காரச்சார விவாதம் நடப்பது சகஜம். இது எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்சனை நாங்கள் பேசிப்போம். நீங்கள் யாரும் விவாதிக்க வேண்டாம்." என்றார்.
புதிய இளைஞரணி தலைவர்
செய்தியாளர்களின் மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து அன்புமணி புறப்பட்டு சென்றார். இப்ப பிரச்சினையைப் பொறுத்தவரை கட்சி பிரச்சினை என்று பார்க்கப்பட்டாலும், குடும்ப குடும்ப பிரச்சனையே கட்சி பிரச்சினைக்கு மூல காரணம் என சொல்லப்படுகிறது. காலை முன்கூட்டியே தைலாபுரத்திற்கு வந்த உறவினர்கள் குடும்ப பிரச்சனையில் ராமதாஸின் மனைவி சரஸ்வதி அம்மாள் எடுத்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்ட பின்னரே அடுத்தடுத்த சமாதான நடவடிக்கைகள் சுபாமாக முடிந்ததாக சொல்லப்படுகிறது.
பாமகவின் இளைஞர் அணி தலைவரை அன்புமணி ராமதாஸ் முடிவு செய்ய கூட்டத்தில் ராமதாஸ் சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க | பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கார்டு இல்லாதவர்களும் பெற முடியும் - எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ