PSBB: உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்தால் தமிழக அரசு கலைக்கப்படும்-சுப்பிரமணியம் சுவாமி அதிரடி
தமிழக அரசு கலைக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பரபரப்பை ஏற்படுத்தியதன் பின்னணி என்ன?
சென்னை: பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசு கலைக்கப்படும் என்று கூறி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி எப்போதும், அதிரடியாக பேசி, பரபரப்பை உண்டாக்குபவர் என்று பெயர் பெற்றவர். தமிழக அரசு பதவியேற்று ஒரு சில வாரங்களுக்குள் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மாநில அரசுக்கு மிரட்டல் விடும் தொனியில் பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் மீது, பாலியல் புகார் எழுந்துள்ளது.
அவர், மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read | 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.86 லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு
இந்த ஆசிரியர் வகுப்புகளில் தகாத முறையில் நடந்துகொள்வதாக ஏற்கனவே மாணவர்கள் தரப்பில் பல புகார்கள் அளிக்கப்பட்டதாகவும், பள்ளி நிர்வாகம் அவற்றை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தான் பாஜக மாநிலங்களவை எம்.பி, சுப்ரமணியன் சுவாமி இன்று தமிழக அரசுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் உள்நோக்கத்தோடு நடவடிக்கை எடுத்தால், தமிழக அரசு கலைக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, இதுதொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்துக்கு தான் கடிதம் எழுதப்போவதாகவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கிய சில நாட்களிலேயே அது, ஜெர்மனியின் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துவதாக சுவாமி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
”நீண்ட காலத்துக்குப் பின், திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. பெரிய மெஜாரிட்டியில் வெற்றி பெற்று வரவில்லை. ஸ்டாலினின் மனைவி துர்காவின் கடவுள் சிந்தனை, வழிபாடு என கடவுளின் அருளால் தான், ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஸ்டாலின் உள்நோக்கம் கொண்டு பள்ளி நிர்வாகத்தை நசுக்க நினைத்தால், ஆட்சியை கலைப்பதை தவிர, வேறு வழியில்லை. கட்டாயம் அதை செய்து காட்டுவேன்” என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
விசாரணை ஒரு தலைபட்சமில்லாமல் நேர்மையாக நடக்க வேண்டும். விசாரணை தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால், தமிழகத்தில் விசாரணை நடக்கவிடாமல் செய்வதற்கான சட்ட நுணுக்கங்கள் தனக்குத் தெரியும் என்று சுவாமி தெரிவித்துள்ளார். பள்ளியை மூடுவது, நிர்வாகத்தை மாற்றுவது என, அரசு தரப்பு நினைத்தால், அப்படி செய்ய அவர்களிடம் ஆட்சி இருக்காது என்று பேசி சுப்பிரமணியம் சுவாமி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ALSO READ: கொரோனா தடுப்பூசி மையம், சிகிச்சை மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR