கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Kallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 34 பேர் உயிரிழந்த நிலையில், இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Kallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உயர் மட்ட குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவிக்க நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
மெத்தனால் வழங்கியது யார்?
இதைத் தொடர்ந்து, மீண்டும் இன்று அவர்களுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கள்ளக்குறிச்சிக்குச் சென்றுள்ளார். இதுவரை இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார், மேலும் இது குறித்துத் தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிவாரணம் அறிவிப்பு
இந்தச் சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்ச ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இச்சம்பவம் தொடர்பாக, இன்று, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், கூடுதல் காவல்துறை இயக்குநர் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அலுவலர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று நான் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
முதல்வரின் முக்கிய அறிவுறுத்தல்
- மெத்தனால் கலந்த விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டுமென்றும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மெத்தனால் இருப்பை முழுமையாகக் கண்டறிந்து, அவற்றைக் கைப்பற்றி அழித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், விஷச்சாராய உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்கான மூலகாரணத்தையும் காவல் துறையினர் கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டுமென்றும், அங்கு அவர்களுக்குத் தேவையான சிறப்பு சிகிச்சை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன்.
- உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உடனடியாகச் சென்று, சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை இரண்டு தினங்களில் வழங்குவார்கள்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ