மக்களை மிகப்பெரிய ஆபத்தில் நிறுத்தியுள்ளது ADMK அரசு - ஸ்டாலின்..!
தமிழக மக்களுக்கான வாழ்வாதார உதவி - கொரோனா நோய்த்தடுப்பு குறித்து நான் மீண்டும் முன்வைத்திருக்கும் ஆலோசனைகளை உடனடியாக முதல்வர் செயல்படுத்த வேண்டும்..!
தமிழக மக்களுக்கான வாழ்வாதார உதவி - கொரோனா நோய்த்தடுப்பு குறித்து நான் மீண்டும் முன்வைத்திருக்கும் ஆலோசனைகளை உடனடியாக முதல்வர் செயல்படுத்த வேண்டும்..!
கொரோனா பரிசோதனைகள் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை அங்கொன்றும் இங்கு ஓன்றுமாக மனம்போனபடி செய்துவருகிறது. மிகப்பெரிய ஆபத்தில் மக்களை நிறுத்தியுள்ளது அதிமுக அரசு என கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குற்றச்சாட்டு.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... "மார்ச் 24-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தை கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கும்- பரந்து விரிந்த பரிசோதனைகளுக்கும் திட்டமிட்டு முறையாகப் பயன்படுத்தாமல் அலட்சியப்படுத்தி, அங்கொன்றும் இங்கொன்றுமாக மனம்போனபடி செய்த அ.தி.மு.க. அரசு மக்களை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் ஆழ்த்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்குத் தளர்வுகளை, ஜூன் 19 முதல் 30 வரை ரத்து செய்த அ.தி.மு.க. அரசு- இந்தக் காலகட்டத்தையும் மருத்துவக் கட்டமைப்பு ரீதியாக, உருப்படியாக, பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை மருத்துவ உலகின் நிபுணர்கள் அறிவார்கள். கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பறிகொடுத்துவிட்டு, இன்றைக்கு மீண்டும் ஊரடங்கு குறித்துப் பரிசீலனை செய்ய முதலமைச்சர் திரு. பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் அடங்கிய வல்லுநர் குழுவைச் சந்தித்துள்ளார். அந்தக் குழு “ஊரடங்கு பரிந்துரைக்கவில்லை” என்றாலும், “பரிசோதனை மிக முக்கியம் அதை அதிகரிக்க வேண்டும். அதுமட்டுமே நோய்த் தொற்றைத் தடுக்கும்” என்று மீண்டும் தெளிவாகப் பரிந்துரைத்துள்ளது.
ஜூன் 19-ம் தேதிக்குப் பிறகான ஊரடங்குக் காலகட்டத்தில் சென்னையில் தினமும் கொரோனா நோய்க்குப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் பாதிப்பு மிகவும் அதிகமாகியுள்ளது. கடந்த பத்து நாட்களில் மட்டுமே 413 பேர் கொரோனா நோயால் தமிழகம் முழுவதும் இறந்துள்ளார்கள். இந்த காலகட்டத்தில் 2.55 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்திருப்பதாக அரசு அறிவித்தாலும்- மாவட்ட வாரியாகவோ, மருத்துவமனை வாரியாகவோ, பரிசோதனை செய்த எண்ணிக்கைகளை இதுவரை அரசு வெளியிடவில்லை. அதனால் இந்த “பரிசோதனை” என்று அமைச்சர்களும், முதலமைச்சரும் கூறுவதே ஒரு “பகட்டு” அறிவிப்பு என்ற நிலை நீடிக்கிறது.
“தெர்மல் ஸ்கேனர்” வைத்து சோதிப்பதையே “டெஸ்ட்” என்று அ.தி.மு.க. அரசு அறிவித்து வருகிறது என்பதை “டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கிலப் பத்திரிகையில் இன்று வெளிவந்த செய்தி அம்பலப்படுத்தியிருக்கிறது.
அச்செய்தியில், விமான நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கணக்குகள் தொடர்பாக அரசு வெளியிடும் “கொரோனா செய்திக் குறிப்பிலேயே” குளறுபடிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள எந்தெந்த விமான நிலையங்களில், எத்தனை பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது? விமான நிலைய வாரியாக எத்தனை பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது என்ற விவரங்களை வெளியிடவில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறது. அ.தி.மு.க. அரசின் கொரோனா பரிசோதனையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கத்திலிருந்தே கூறிவரும் குற்றச்சாட்டிற்கு இந்தச் செய்தி மேலும் ஆதாரமாக அமைந்துள்ளது.
READ | ஜூலை இறுதிக்குள் இந்தியா வரும் ரபேல் போர் விமானங்கள்... இதன் சிறப்பம்சம் என்ன?
“நோயைக் கண்டறிதல்- பரிசோதனைச் செய்தல்- சிகிச்சை அளித்தல்” ஆகிய அனைத்திலுமே, அ.தி.மு.க. அரசு படுமோசமாகத் திணறி - இன்றைக்கு எத்தனை ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டாலும் பயனில்லை என்ற அபாயகரமான நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. “அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முகக்கவசம் வழங்கப்படும்” என்று ஜூன் 2-ம் தேதி அறிவித்தார் முதலமைச்சர் திரு. பழனிசாமி. இன்று 27 நாட்கள் கடந்து விட்ட நிலையில் எத்தனை நியாய விலைக் கடைகளில்- எவ்வளவு பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது?
செங்கல்பட்டு உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லை என்று செய்திகள் வருகிறது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு 5000 ரூபாய் பண உதவியை நேரடியாக வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இன்றுவரை அதை வழங்குவதற்குக் கூட முன்வரவில்லை. மின் கட்டணம் ஒவ்வொரு குடும்பத்தையும் “மின்னல்” போல் தாக்குகிறது. அதைக் குறைக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அதற்கு மாறாக “மின் கட்டணம் முறையாகத்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது”என்று உயர்நீதிமன்றத்திலேயே வாதிட்டு – அடித்தட்டு மக்களை வாட்டி வதைக்கிறது அ.தி.மு.க. அரசு. கேரள மாநிலம் போல் 70 சதவீத மின்கட்டணத்தை செலுத்தினால் போதும்- தவணை முறையில் கூட செலுத்திக் கொள்ளலாம் என்று, நெருக்கடியான இந்த நேரத்தில், ஒரு மனித நேய உத்தரவினைக் கூடப் பிறப்பிக்க இந்த அரசுக்கு மனமில்லை.
கடுமையான வருவாய் இழப்பினைச் சந்தித்துள்ள பல்வேறு தரப்பு மக்களும் அடுத்து தங்கள் வாழ்க்கை நொறுங்கிப் போகுமோ என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகள் கைவிட்டதால் மதுரை பழங்காநத்தத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் இன்றைய தினம் மதுரையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனாவில் தன் கணவர் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் விருதுநகர் மாவட்டத்தில் நேற்றைய தினம் ராமபிரபாவதி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனா சோகம், வாழ்வாதாரம் பாதிப்பு, வருவாய் தேடும் குடும்பத் தலைவனை கொரோனாவிற்கு பறிகொடுத்த கொடுமை போன்றவற்றால் மாநிலம் முழுவதும் தற்கொலைகள் தொடர்ந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.
ஆகவே ஊரடங்கு குறித்து இன்று ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களுக்குப் பின்வரும் ஆலோசனைகளை மீண்டும் முன்வைக்கிறேன்.
1) வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடித்தட்டு மக்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உயிரூட்டும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5000 ரூபாய் நேரடியாகப் பண உதவி வழங்கிட வேண்டும்.
2) ஊரடங்கு கால மின்கட்டணத்தினை- ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி, உடனடியாகக் குறைத்திட வேண்டும்.
3) நியாயவிலைக் கடைகள் மூலம் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்களை அளித்திட வேண்டும்.
4) பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் மற்றும் பிற வருடங்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து- அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.
5) முன்களப் பணியாளர்களாக விளங்கும் மருத்துவர், செவிலியர், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து கொரோனா போர் வீரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை அளித்திட வேண்டும்.
6) கொரோனா நோய்ப் பாதிப்புக்குள்ளான முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த நிதியை உடனே வழங்கிட வேண்டும்.
7) கொரோனா சோதனை குறித்த விவரங்களை விமான நிலையம் வாரியாக, மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட வாரியாக வழங்கிட வேண்டும்.
8) கொரோனா சமூகப் பரவல் ஆகிவிட்டதா இல்லையா என்பது பற்றி, தெளிவான அறிக்கை பெற, தொற்று நோய் மருத்துவ நிபுணர்கள் கொண்ட தனிக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும்.
விடிய விடிய ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப 'பல்டி' அடித்துவிட்டு, பின்னர் ஊடகங்கள் முன் "ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்" என்று வழக்கம்போல் கூறாமல், இந்த ஆலோசனைகளைக் காதுகொடுத்துக் கேட்டு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில், இந்தியாவில் இரண்டாவது அதிகபட்ச நோய்த் தொற்றுக்கு உள்ளான டெல்லியில் நடைபெறும் கொரோனா பரிசோதனை விவரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று முதல்வரைச் சந்தித்த நிபுணர் குழுவே சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ள நிலையில் - டெல்லி அரசு கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதோடு- “குருதி நீரியல்” (Serological Test) பரிசோதனை முறையில் சோதனை செய்து- நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் அனைவரையும் விரைவில் கண்டறியத் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அது போன்ற “பரிசோதனை முறையை” தமிழ்நாட்டிலும் கடைப்பிடித்து- நேற்றைய தினம் 3940 பேருக்கு நோய்த் தொற்று என்று உருவாகியுள்ள ஆபத்தான சூழலை அடியோடு நீக்குவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் திரு. பழனிசாமி எடுக்க வேண்டும் என்றும், “பரிசோதனையை அதிகரிக்கக் கேட்கும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன் அவர்களை மிரட்டும் அமைச்சர் திரு. உதயகுமாருக்கு முதலமைச்சர் “முடிந்தால்” கொரோனா நோயின் தீவிரத்தைப் புரிய வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.