கொரோனா நோய்க்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த வேண்டும் - PMK!
கொரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை..!
கொரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை..!
இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... "தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6472 என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சென்னையிலும் புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 17 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக 1300 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. கொரோனா ஒழிப்பில், தமிழகம் முழுவதும் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 7-ஆம் தேதி தான் முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் இரு மாதங்கள் கழித்து மே 7&ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் ஒட்டுமொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 5,409 என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், இரு மாதங்களில் ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கையை விட ஆயிரத்திற்கும் அதிகமாக தொற்றுகள் நேற்று ஒரே நாளில் ஏற்பட்டுள்ளன. நோய்த் தொற்றுகள் எந்த அளவுக்கு அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அது பற்றி கவலைப்படத் தேவையில்லை; அது நோய் பாதித்தவர்களைக் கண்டுபிடித்து, சிகிச்சையளித்து அதன் மூலம் நோய்ப்பரவலை கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஓர் அங்கம் தான் என்று உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவும் கூறுகின்றன. அதனால், இதை நினைத்துக் கவலைப்படத் தேவையில்லை.
அதேபோல், தமிழகம் முழுவதும் நோய்த் தாக்க விகிதமும் கட்டுக்குள் தான் உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 62,112 ஆகும். இதில் நோய்த்தொற்று கண்டறியப் பட்டவர்களின் எண்ணிக்கை 6472 ஆகும். இதனடிப்படையில் நோய்த்தாக்க விகிதம் 9.59 விழுக்காடு என்ற அளவில் பத்துக்கும் குறைவாகவே இருப்பதால் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. இந்த புள்ளி விவரங்கள் மனநிறைவு அளித்தாலும் கூட, நாம் நினைத்தால் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்.
கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக மக்களாகிய நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தால், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இந்நேரம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். அந்த சாதனை நிகழ்த்தப்படாததற்கான காரணம் பொதுமக்களாகிய நமது ஒத்துழைப்பின்மை தான். இந்த உண்மை கசப்பாக இருந்தாலும் அதை நாம் அனைவரும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
ALSO READ | வீட்டில் தங்கி இருந்தவர்களுக்கு தான் COVID-19 பாதிப்பு அதிகம்.. ஆய்வில் அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் ஜூன் 1-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1161 மட்டும் தான். அவர்களில் 967 பேர் சென்னையையும், 90 பேர் புறநகர் மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள். மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 மட்டும் தான். 16 மாவட்டங்களில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 16 மாவட்டங்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் தான் இருந்தது. கொரோனாவைக் கட்டுப்படுத்த சென்னையில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்றைய நாளில் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 2015 பேரில் 474 பேர் மட்டும் தான் சென்னை, புறநகர் தவிர்த்த மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால், நேற்றைக்கு இந்த எண்ணிக்கை 4015 ஆக உயர்ந்திருக்கிறது.
இதற்கான காரணங்களில் முக்கியமானது சென்னையிலிருந்து குறுக்கு வழிகளில் சொந்த ஊர்களுக்கு சென்ற பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா ஆய்வு செய்து கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் தவறி விட்டது தான். சென்னையைப் போலவே பெங்களூரிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்களும் கொரோனாவை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். கட்டுப்பாடுகள் நிறைந்த சில ஊர்களில் வெளியூரில் இருந்து எவரேனும் வந்தால், அவர்கள் குறித்த விவரங்களை அந்த ஊர் மக்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றனர். அந்த பகுதிகளில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறிய பகுதிகளில் தான் கொத்துக்கொத்தாக கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மொத்தம் 113 கொரோனா ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சளி மாதிரி எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் சளி மாதிரி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கொரோனா ஆய்வு செய்து கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. இவ்வளவுக்குப் பிறகும் ஆய்வு செய்து கொள்ளாத பலர், கொரோனாவை பரப்பி சமுதாயத்திற்கு பெரும் கேடு இழைக்கின்றனர்.
ALSO READ | மீறினால் ரூ. 1 லட்சம் அபராதம்; 2 ஆண்டுகள் சிறை தண்டனை
தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது; கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்; கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும்; சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, தமிழக அரசு ஆகியவை ஆலோசனைகளை வழங்கியும் சென்னை போன்ற நகரங்களில் பெரும்பான்மையினர் அதை கடைபிடிப்பதில்லை. தமிழக அரசு கொரோனா தடுப்புக்காக அதனால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. ஒரு கை தட்டினால் ஓசை வராது; இரு கைகளையும் தட்டினால் தான் ஓசை எழும் என்பதை மக்கள் உணர வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதன்மூலம் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் பணிகளுக்கு துணை நிற்க வேண்டும். தமிழக அரசும் பாதுகாப்பு விதிகளை மக்கள் முழுமையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய, ஜார்க்கண்ட் மாநிலத்தில் முகக்கவசம் அணிய ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதைப் போன்று, தமிழகத்திலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.