கச்சத்தீவை மீட்டெடுக்க இது சரியான தருணம்: விஜயகாந்த்
தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டெடுக்க இது சரியான தருணம் என்பதால் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், வயிற்றுப் பிழைப்புக்காக உயிரைப் பணயம் வைத்து கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, துப்பாக்கியால் சுடுவது போன்ற அராஜக செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனப் பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் போராடி வருவதைக் குறிப்பிட்ட அவர், இலங்கையின் அட்டூழியத்தைத் தடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வெறும் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபோன்ற சூழலில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் ஜாமீனில் செல்ல தலா ஒரு கோடி ரூபாய் பிணைத் தொகை செலுத்த வேண்டுமென அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | சர்ச்சைக்குள்ளான அமித் ஷா பேச்சு: நழுவிய ஈபிஎஸ்; உறுதி காட்டிய ஓபிஎஸ்
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நிலையில், தமிழக மீனவர்களை விடுவிக்க ஒரு கோடி ரூபாய் பிணைத் தொகை செலுத்த வேண்டும் என கூறுவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசை மத்திய அரசு கண்டிப்பதோடு, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டெடுக்க இது சரியான தருணம் என்பதால் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | பணத்துக்காகக் கொலை செய்யும் கொடூரம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும்: ராமதாஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G