சர்ச்சைக்குள்ளான அமித் ஷா பேச்சு: நழுவிய ஈபிஎஸ்; உறுதி காட்டிய ஓபிஎஸ்

 இந்திக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 9, 2022, 05:40 PM IST
  • ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது
  • ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது
  • இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது
சர்ச்சைக்குள்ளான அமித் ஷா பேச்சு: நழுவிய ஈபிஎஸ்; உறுதி காட்டிய ஓபிஎஸ்  title=

இந்தியாவின் அலுவல் மொழிகளாக ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை குறைத்து இந்திக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

தமிழக முதல்வர் ஸ்டாலின், "இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்'' என்று தெரிவித்தார். 

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஈபிஎஸ், அதுபற்றி எதுவும் தெரியாது என்று பதில் அளித்து நழுவினார்.

மேலும் படிக்க | இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாகிறதா இந்தி? அமித் ஷா சூசகம்

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இதுகுறித்து உறுதியாகக் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவைக்கான எழுபது விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தி மொழியில் தான் தயாரிக்கப்படுகிறது என்றும், மற்ற மொழிகளைப் பேசும் மாநில மக்கள் இந்திய மொழியில் பேச வேண்டுமென்றும், ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழுவின் தலைவர் என்ற முறையில் உள்துறை அமைச்சர் பேசியிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன என்று அறிக்கையில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். 

இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில், இந்தி மொழியைத் தாங்களாகவே மனமுவந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம் என்றும், அதே சமயத்தில் இந்தித் திணிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார் என்றும், நீண்ட நாட்களாகத் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றும், இன்று வரை இந்தியாவில் ஆங்கில மொழி இருக்கிறது என்றால் அதற்கு மூல காரணம் பேரறிஞர் அண்ணா என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது என்பதையும், தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோதே அதிமுகவின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுவிட்டது என்பதையும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குக் கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் 38 கோரிக்கைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

Trending News