`டெங்கு, மலேரியா போன்றது சனாதனம்...` உதயநிதி பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு - பதிலடி என்ன?
Udhayanidhi Stalin In Sanatan Abolition Speech: உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பேசிய கருத்துக்கு பாஜக போன்ற வலதுசாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Udhayanidhi Stalin In Sanatan Abolition Speech: சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். தொடர்ந்து மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,"இந்த மாநாட்டிற்கு சனாதான எதிர்ப்பு மாநாடு என பெயரிடாமல், சனாதன ஒழிப்பு மாநாடு என பெயர் வைத்ததற்கு இதன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்க தான் வேண்டும். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிக்க தான் வேண்டும், எதிர்க்க முடியாது.
அதேபோல் தான் சனாதனமும். அதை எதிர்க்க கூடாது, அதனை ஒழிக்க வேண்டும். சனாதானம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சனாதானம் என்ற சொல் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது அதன் அர்த்தம் நிலையானதாகவும் மாற்ற முடியாததாகவும் இருப்பது. ஆனால் நாம் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது. அனைத்தையும் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம் தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும்" என குறிப்பிட்டார். அமைச்சர் உதயநிதி பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக உட்பட பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
'இது திராவிட மண்'
அவரது பேச்சு வைரலானதை அடுத்து, 'சட்ட உரிமை கண்காணிப்பகம்' என்ற தனியார் அமைப்பு அதன் ட்விட்டர் (தற்போது X) பக்கத்தில், "உதயநிதி ஸ்டாலினின் கீழ்த்தரமான கருத்துகளுக்கு எதிராக சட்டப்பூர்வ தீர்வுகளை ஆராய்வோம்" என்று பதிவிட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அதில்,"இதுபோன்ற வழக்கமான காவி மிரட்டல்களுக்கு பயந்துவிட மாட்டோம்.
பெரியார், அண்ணா, கலைஞரின் சீடர்களான நாங்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் கீழ், சமூக நீதியை நிலைநாட்டவும், சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்டவும் என்றென்றும் போராடுவோம். இன்று, நாளை, மற்றும் என்றென்றும் சொல்கிறேன், திராவிட மண்ணில் இருந்து சனாதன தர்மத்தை நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானம் கொஞ்சம் கூட குறையாது." என உறுதிபட தெரிவித்துள்ளார்.
இனப்படுக்கொலைக்கு அழைப்பா?
இதை போன்று, பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான அமித் மாள்வியா அவரது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,"திமுக அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை மலேரியா மற்றும் டெங்குவுடன் இணைத்து பேசியுள்ளார். அதை ஒழிக்க வேண்டும், வெறுமனே எதிர்க்கக்கூடாது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். சுருக்கமாகச் சொன்னால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய அவர் அழைப்பு விடுக்கிறார். திமுக – காங்கிரஸ் கட்சிகளின் (இந்தியா கூட்டணி சந்திப்பு) மும்பை சந்திப்பில் இந்த கருத்து தான் ஏற்றுக் கொள்ளப்பட்டதா?" என ட்வீட் செய்திருந்தார்.
அதுமட்டுமின்றி, அமித் மாள்வியா ஒரு வீடியோவையும் பகிர்ந்திருந்தார். அதில், "இந்தி மொழியில் உதயநிதி ஸ்டாலினின் வெறுப்பு பேச்சு மொழிபெயர்ப்பு இதோ" என குறிப்பிட்டுள்ளார். உதயநிதி பேசியதை வெறுப்பு பேச்சு என்று அமித் மாள்வியா கூறுகிறார். தொடர்ந்து, "ராகுல் காந்தி 'மொஹப்பத் கி துகான்' என்று பேசுகிறார், ஆனால் காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுகவின் வாரிசு சனாதன தர்மத்தை ஒழிப்பது பற்றி பேசுகிறது. காங்கிரஸின் மௌனம் இந்த இனப்படுகொலை அழைப்புக்கு ஆதரவா... இந்தியா கூட்டணி, அதன் பெயருக்கு உண்மையாக, ஒரு வாய்ப்பு கிடைத்தால், பாரதம் என்ற பல்லாயிரம் ஆண்டு பழமையான நாகரீகத்தை அழித்துவிடும்" என அந்த வீடியோ பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
'கொள்கையை தான் ஒழிப்போம்'
இதற்கு உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில்,"சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலை செய்வேன் என நான் எங்குமே சொல்லவில்லை. சனாதன தர்மம் என்பது சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும், மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும்.
நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன். சனாதன தர்மத்தால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் சார்பாக நான் பேசினேன். சனாதன தர்மம் மற்றும் சமூகத்தில் அதன் எதிர்மறையான தாக்கம் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் விரிவான எழுத்துக்களை எந்த மன்றத்திலும் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன்.
மேலும் படிக்க | "பாஜக ஆட்சியை வீழ்த்துவதே முதல் நோக்கம்" முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
'பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள்'
எனது உரையின் முக்கிய அம்சத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன்: கொசுக்களால் ஏற்படும் டெங்கு, மலேரியா மற்றும் கொடிய கொரோனா தொற்று போன்ற நோய்கள் பரவுவது போல, பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நான் நம்புகிறேன். நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்" என பதில் அளித்துள்ளார்.
அண்ணாமலையின் பதிவு
உதயநிதி பேச்சு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில்,"மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டிச் செல்வத்தைக் குவிப்பதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் ஒரே குறிக்கோள். உதயநிதி ஸ்டாலின் நீங்கள், உங்கள் தந்தை அல்லது உங்கள் இருவருடைய கருத்துகளும் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து பெறப்பட்ட சிந்தனைகள் ஆகும். அந்த மிஷனரிகளின் எண்ணம், அவர்களின் தீய சித்தாந்தத்தை கிளியாக வளர்க்க உங்களைப் போன்ற மந்தமானவர்களை வளர்க்க வேண்டும் என்பதுதான்.
தமிழகம் ஆன்மிக பூமி. இதுபோன்ற நிகழ்வில் மைக்கைப் பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதுதான் நீங்கள் செய்யக்கூடிய சிறந்த செயல்" என குறிப்பிட்டுள்ளார். இது தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. திமுக மட்டுமின்றி பல்வேறு இடதுசாரிகளின் தரப்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதாரவு கருத்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ''
மேலும் படிக்க | "நான் வெடித்துச் சிதறினால் கட்சிகள் தாங்காது" - சீமான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ