'ஒன்றிய அமைச்சர்' எம்.பி., சொன்ன ஒரு வார்த்தை... அலறிய பாஜக தொண்டர்கள் - என்ன பிரச்னை?

Tamil Nadu Latest: ஒன்றிய அமைச்சர் எனக் குறிப்பிட்டதால் எம்.பி., நவாஸ் கனிக்கு பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ராமநாதபுரத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 2, 2023, 10:18 AM IST
  • அந்த நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா வருகை தந்தார்.
  • மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் பங்கேற்றார்.
  • பாஜகவின் நவாஸ் கனிக்கு எதிராக ஒருமையில் கோஷமிட்டனர்.
'ஒன்றிய அமைச்சர்' எம்.பி., சொன்ன ஒரு வார்த்தை... அலறிய பாஜக தொண்டர்கள் - என்ன பிரச்னை? title=

Tamil Nadu Latest: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் துறைமுகத்திற்கு மீனவர்களுடைய கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் நேற்று (செப். 1) வருகை தந்தனர்.

மாலை 4 மணிக்கே விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு 8:30 மணி அளவில் நிகழ்ச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் மற்றும் மத்திய இணை அமைச்சர் ஆகியோரை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி வரவேற்று பேசினார். 

ஒருமையில் கோஷமிட்ட தொண்டர்கள்

அப்போது, மத்திய அமைச்சரை குறிப்பிடும் போது, "ஒன்றிய அமைச்சர்"  என குறிப்பிட்டதால் அங்கிருந்த பாஜக தொண்டர்கள் நவாஸ் கனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 'மேடையில் இருந்து கீழே இறங்கு', 'உனது பேச்சை நிறுத்து', 'மத்திய அமைச்சர் என பேசு' என ஒருமையில் பேசி கோஷமிட்டனர்.

இதனை அடுத்து பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தனது பேச்சை நவாஸ் கனி பாதியில் நிறுத்திக் கொண்டார். மேலும் அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் மத்திய அமைச்சர் என பேச வேண்டுமென தொடர்ந்து கூச்சலிட்டனர்.

மேலும் படிக்க | "பாஜக ஆட்சியை வீழ்த்துவதே முதல் நோக்கம்" முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

தமிழில் பேசிய மத்திய அமைச்சர்

இதனை அடுத்து, சூழ்நிலையை உணர்ந்த மத்திய அமைச்சர், அவரிடமிருந்து மைக்கை வாங்கி, "நான் மாலை வருவதாக இருந்த நிலையில், இரவு வரை எனக்காக காத்திருந்த மீனவ மக்களை சந்திப்பதற்கு நான் இங்கு வந்துள்ளேன். நன்றி வணக்கம்" என தமிழில் பேசி பேச்சை முடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அதே கருத்தை வலியுறுத்தினார். மேலும், நவாஸ் கனி, ஒன்றிய அமைச்சர் என குறிப்பிட்டு பேசிய பேச்சுக்கு அங்கிருந்த பாஜக தொண்டர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து 'நவாஸ் கனி ஒழிக' என கோஷமிட்டபடியே இருந்தனர். 

நவாஸ் கனி அதிர்ச்சி

இதனால் விழா முடிந்த நிலையில், பரபரப்பான சூழ்நிலையை அறிந்த மத்திய அமைச்சர் பர்சோத்தம்  ரூபாலா தனது காரிலேயே நவாஸ் கனியை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். நீண்ட நேரம் நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சி நவாஸ் கனியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக விழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாஜக தொண்டர்களின் இந்த எதிர்ப்பை கொஞ்சமும் எதிர்பாராத நவாஸ் கனி, மேடையில் அமைச்சருக்கு நான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்பது போன்று தனது விளக்கத்தை அளித்ததாக தெரிகிறது.

ஏன் 'ஒன்றிய அமைச்சர்'?

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ராமநாதபுரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானவர், நவாஸ் கனி. பெரும்பாலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தற்போது 'மத்திய' என்ற சொல்லை விட 'ஒன்றிய' என்ற வார்த்தையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். 

அதாவது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் தான் என்றும் மாநிலங்களே பிரதானம் என்ற நோக்கில் இந்த வாதம் திமுக தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டது. 'மத்திய' என குறிப்பிடும் போது அது அதிகார பரவலாக்கத்தை தடுக்கும் வகையில் இருப்பதாகவும், அரசியலமைப்பு சட்டத்தில் Union Government என குறிப்பிடப்பட்டுள்ளதால் அதற்கான சரியான தமிழாக்கமாக ஒன்றிய அரசு என்று தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த வாதத்தை பாஜகவினர் ஏற்க மறுத்து வருகின்றனர். அதில், ஒரு பகுதியாக எம்.பி., நவாஸ் கனிக்கு எதிராக இந்த கண்டனத்தை பாஜகவினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் கோவில்களில் வடக்கு வாசல் மூடப்பட்டிருப்பது ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News