பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு: ஆய்வு செய்தார் சென்னை மாநகராட்சி ஆணையர்
வேளச்சேரியில் நடைபெற்று வரும் மறுவாக்குப்பதிவு மையத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வாக்குப்பதிவு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்த மாதம் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. கடும் பாதுகாப்புக்கு இடையில் வாக்குப் பதிவு நடந்தது.
எனினும், சென்னையில் உள்ள வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 92 ஆவது எண் வாக்குச்சாவடியிலிருந்து இரண்டு மின்னணு இயந்திரங்கள், ஒரு விவி பாட் இயந்திரம் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவற்றை இருசக்கர வாகனத்தில் ஊழியர்கள் ஏற்றிச்சென்ற சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது.
விதிகளை மீறி ஊழியர்கள் இவற்றை எடுத்துச்சென்ற விவகாரம் விமர்சங்களுக்கு உள்ளானது.
முதலில், அந்த இயந்திரங்கள் பழுதடைந்திருந்தன என்றும், அதனால்தான் அவை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டன என்றும் ஊழியர்களின் தரப்பில் கூறப்பட்டது.
எனினும், இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், அந்த இயந்திரங்களில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.
ALSO READ: ஜாம்பவான் வேட்பாளர்களை ஓரம் கட்டிய வேட்பாளர்: தமிழகத் தேர்தலின் சுவாரசிய தகவல்
இதைத் தொடர்ந்து, இந்த வாக்குச்சாவடியில், மறுவாக்குப்பதிவு (Re-Polling) நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இது குறித்து ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் ஏப்ரல் 17 ஆம் தேதி வேளச்சேரி பகுதியில் மறுவாக்குப்பதிவு நடக்கும் என தெரிவித்திருந்தது.
அதன்படி, பலத்த பாதுகாப்புக்கு இடையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும்.
வேளச்சேரியில் நடைபெற்று வரும் மறுவாக்குப்பதிவு மையத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வாக்குப்பதிவு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார். முன்னதாக நேற்று மாலை தேர்தல் நடத்தும் அதிகாரி தலைமையில் பாதுகாக்கப்பட்ட வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புடன் வாக்களிக்கும் மையத்திற்கு வாக்குச்சாவடி பெட்டிகளை எடுத்து வந்தனர்.
இந்த வாக்குச்சாவடி 548 வாக்குகளைக் கொண்டுள்ளது. இன்று நடக்கும் வாக்குப்பதிவில் கொரோனா தொற்றுக்கான (Coronavirus) அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் தனி மனித இடைவெளியை கடைபிடித்து வாக்களித்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான (TN Assembly Election) வாக்கெண்ணிக்கை ம்மே மாதம் இரண்டாம் தேதி நடக்கவுள்ளது.
ALSO READ: பார் புகழும் மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ
இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR