Tamil Nadu Election Survey 2021: "வெற்றி நடை போடும் தமிழகமே", "ஸ்டாலின் தான் வரப்போறாரு" "ஓட்டு போடப் போற பொண்ணே கவலப்படாதே" இந்தப் பாடல்கள் தான் தற்போது தமிழக தேர்தல் களத்தைப் பரபரப்பாகி கொண்டிருப்பவை..!
தழிழக சட்டமன்றம் இப்படியொரு சட்டமன்ற தேர்தலை இதற்கு முன்னர் சந்திக்கவில்லை. முன்னாள் முதல்வர்கள் செல்வி. ஜெயலலிதா மற்றும் மு. கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கழகங்களும் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்ற தேர்தல் இது. புதிதாக வந்திருக்கும் அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் தாக்கம் களத்தையே மாற்றியமைத்திருக்கிறது. குறிப்பாகத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக - தேமுதிக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது என்றாலும், பிரதான போட்டி திமுக - அதிமுக கூட்டணி மட்டுமே. இந்த நிலையில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும்? யார் முதல்வராக வருவார்? என்ற எதிர்பார்ப்பில் தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக்கொண்டுள்ளது.
மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், கமலஹாசன், சீமான் என ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். இங்குத் தான் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், தமிழகத்தை பொறுத்தவரை மொத்த வாக்காளர்கள் 6.36 கோடி பேர் இதில் ஆண் வாக்காளர்கள் 3.8 கோடி பேரும் பெண் வாக்காளர்கள் 3.18 கோடி பேர் உள்ளனர். இவர்களில் முதன்முறையாக வாக்களிக்க உள்ளவர்கள் 8.09 லட்சம். புள்ளி விரவரங்களை ஒப்பிடுகையில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
ALSO READ | TN Election 2021: வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் தவறு செய்துவிட்டதா அதிமுக?
இப்படி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக தேர்தலில் பாஜகவின் இடத்தை நாம் சற்று உற்று கவனிக்க வேண்டும் கடந்த முறை ஒரு இடங்களில் கூடப் பெற முடியாத சூழ்நிலையில் தற்போது இரட்டை இலக்கத்தைப் பிடித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் பாஜகவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் அண்ணாமலை ஆகியோர் பம்பரமாகச் சுழன்று தங்களது பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் (மார்ச் 30) திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் பேசும்போது கூட, திமுகவை கடுமையாகச் சாடிப் பேசினார். இப்படி இருக்கையில் இரு கட்சிகளும் அறிவித்துள்ள வாக்குறுதிகளும், இலவசத் திட்டங்களும் தேர்தலில் ஒரு முக்கிய இடம் பிடிக்கும். குறிப்பாக அதிமுக சார்பில் 160 வாக்குறுதிகளும், திமுக சார்பில் 7 முதன்மையான வாக்குறுதிகளும் முன்னெடுத்து இந்த தேர்தலைச் சந்திக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக இந்த முறை ஆட்சியைப் பிடித்த தீருவோம் என்றும், மக்களுக்குச் சீரான திட்டங்களை வழங்குவோம் என்றும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இடத்திலும் சுட்டிக்காட்டுகின்றன.
அதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக நாங்கள் 10 ஆண்டுகளில் இவற்றையெல்லாம் செய்துள்ளோம், இந்த வாக்குறுதிகளைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என வாக்குறுதிகளை அள்ளி விடுகிறது.
ALSO READ | திமுக 2G ஏவுகணையை பெண்கள் மீது வீச ஆரம்பித்துள்ளது: பிரதமர் மோடி
இப்படி மாறி மாறி வாக்குறுதிகளை அளித்தாலும் கூட, தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6 ஆம் தேதிவரை இந்தத் தேர்தல் தூரம் நீடிக்காது. மாறாக வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதிவரை தேர்தல் ஜுரம் தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த காலகட்டத்தில் இருமுனை போட்டி மட்டுமே நிலவியது. இதனால் வாக்குப்பதிவு நடைபெற்ற அன்றைய தினம் பதிவான வாக்குகளின் சதவீதத்தை வைத்து இவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள் என கருத்துக் கணிப்புகள் வெளியானது.
ஆனால் தற்போது 5 முதல்வர் வேட்பாளர்கள், 5 முனை போட்டி நிலவுவதால் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கணிப்பது சற்று சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல் மே 2 ஆம் தேதியன்று மட்டுமே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று தெரியவரும். யூகத்தின் அடிப்படையில் திமுக, அதிமுக, அமமுக என ஊடகங்கள், அரசியல் வல்லூநர்கள், கருத்துக் கணிப்பு பட்டியல் வெளியிட்டாலும், இறுதியில் வெற்றி பெறுவது மக்கள் தீர்ப்பு மட்டுமே ஆகும். இதில் ஒன்றை பதிவு செய்ய விரும்புவது என்றால் சமூக வலைதளங்களும் இந்தத் தேர்தலில் பங்களிப்பு கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR