தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், புயலுக்கு முந்தைய அமைதியைப் போல அரசியல் களம் அமைதியாக உள்ளது. இந்த நிலையில், வாக்குப்பதிவு குறித்த சில சுவாரசியமாக தகவல்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளன.
வேட்பாளர்கள் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளரே வெல்ல முடியும். ஆனால், பல தனிப்பட்ட, தனித்துவமான அம்சங்களில் பல புதிய வேட்பாளர்கள் பலரது கவனத்தைக் கவர்ந்து வருகிறார்கள்.
தேர்தல் நேரத்தில், அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு சுவாரசியமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் (Election Commission) வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களையும், வேட்பாளர் விவரங்களையும் பொது மக்கள் பதிபிறக்கம் செய்து பார்க்க முடியும். ஒவ்வொரு வேட்பாளரின் பக்கம் ஒவ்வொரு முறை பதிவிறக்கம் செய்யப்படும்போதும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
ALSO READ: பார் புகழும் மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
அதன் படி, அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேட்பாளர் பக்கங்களில் சில ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இன்றைய நிலவரப்படி, மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட வேட்பாளரின் பிரமாணப் பத்திரம், பூம்புகார் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட காளியம்மாளுடையதாகும். அவரது பிரமாணப் பத்திரம் 7 லட்சத்து 59 ஆயிரம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி போட்டியாளர்களின் பிரமாணப் பத்திரங்கள் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டிடுக்கும் என நினைத்தவர்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தைத் தந்துள்ளது.
போடிநாயக்கனூரில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரமாணப் பத்திரம் 3,343 முறையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) ஆகியோரது பிரமாணப் பத்திரங்கள் சுமா 10 ஆயிரம் முறையும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
காளியம்மாள் யார்?
நாம் தமிழர் கட்சி (Naam Thamizhar Katchi) சார்பில் தேர்தல் களத்தில் உள்ள காளியம்மாள், கடந்த 2019 ஆம் ஆண்டு வட சென்னை தொகுதியில் போட்டியிட்டார். அந்த நேரத்தில் அவர் 60,515 வாக்குகளைப் பெற்றார். அப்போது அவர் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரம் 66 முறை மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. இம்முறை சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிடும் அவரது பிரமாணப் பத்திரம் 7 லட்சத்துக்கும் மேலாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, பிரமாணப் பத்திரத்தில் வேட்பாளரின் முழு விவரங்களும் இருக்கும். அவர்களது கல்வித் தகுதி, வருமானம், சொத்து விவரம், கடன் விவரங்கள் ஆகிய விவரங்களை இதில் தெரிந்துகொள்ளலாம். மக்கள் காளியம்மாள் பற்றிய விவரங்களில் மிக அதிகமாக ஆர்வம் காட்டியதன் காரணம் அவரது அயராத களப்பணி என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். பதிவிறக்க போட்டியில் வென்றவர் வாக்கு எண்ணிகையன்று வெல்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR