சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தவறான தகவல்களை வெளியிடுவதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., உயர்நீதிமன்றமே கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது என்று உத்தரவிட்ட பிறகு “சாத்தான்குளம் விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது” என்று எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து உணவுத்துறை அமைச்சர்  காமராஜ் கூறியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


READ | NLC விபத்து: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் - அமித்ஷா...


“நீதிபதியை” மிரட்டியது போல் “உயர்நீதிமன்றத்தையே” எச்சரிக்கும் வகையில் இந்தக் கருத்தைக் கூறியிருக்கிறாரா என்று அமைச்சர் தெளிவுபடுத்திட வேண்டும். அப்பாவிகள் ஜெயராஜையும், பென்னிக்ஸையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று- பிணமாகத் திருப்பிக் கொடுத்துவிட்டு இன்னும் அந்த இரட்டைக் கொலைக்கு அமைச்சர் பதவியில் இருப்பவர் வக்காலத்து வாங்கி பேட்டி கொடுப்பது மகா கேவலமான செயல். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள வழக்கு விசாரணையைத் திசைதிருப்பத் தூண்டும் செயல்.


“ இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதல்வர் பழனிசாமி என்னிடம் தெரிவித்தார்” என்று அமைச்சர் திரு. காமராஜ் கூறியிருக்கிறார். எனக்கு ஒரு சந்தேகம் இப்போது வருகிறது.


தமிழகத்தின் முதலமைச்சர் திரு. பழனிசாமியா அல்லது அமைச்சர் திரு. காமராஜா என்பதுதான் அந்த சந்தேகம்!


ஒருவேளை நேற்று எங்கள் கழகத் தலைவர் கூறியபடி சத்தம் போடாமல் போலீஸ் துறையை அமைச்சர் திரு. காமராஜிடம் முதலமைச்சர் ஒப்படைத்து விட்டாரா?


உயர்நீதிமன்றம், “இறந்த இருவரின் குடும்பத்தினரின் கண்களில் இருந்து ஆறாக ஓடும் கண்ணீரைத் துடைக்கும் வகையில் சிபிசிஐடி டிஎஸ்பி திரு. அனில்குமார் புலனாய்வு செய்ய வேண்டும்” என்றும், “இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றமே நேரடியாகக் கண்காணிக்கும்” என்றும் உத்தரவிட்ட பிறகு- அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மட்டுமே முதலமைச்சருக்கு இருக்கிறது. “சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உயர்நீதிமன்றத்திற்கு முதலமைச்சர் சொல்ல வேண்டுமே தவிர- தன் கீழ் உள்ள ஓர் அமைச்சருக்கு அல்ல!


READ | NLC விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!...


அப்படியென்றால் இந்த அமைச்சரவையில் திரு. காமராஜ் இன்னொரு “சூப்பர் முதலமைச்சரா?”


“இது ஒரு உணர்வுபூர்வமான விஷயம். எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட யாரும் தவறான தகவல்களைப் பரப்பக்கூடாது” என்று எங்கள் கழகத் தலைவரைப் பார்த்துக் கேட்கும் அமைச்சர் திரு. காமராஜ்- ஜூன் 19-ம் தேதியிலிருந்து 12 நாட்களாக எங்கு போனார்? அவருடைய உணர்வு எங்கே போனது? அமைச்சர் திரு. காமராஜின் உணர்வு எல்லாம் “கமிஷன்” “கலெக்‌ஷன்” என்பது எங்களுக்குத் தெரியும்!


அது மட்டுமா? நீதிபதியையே காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி- இந்த இரட்டைக் கொலை தொடர்பான தடயங்களை மறைக்க முயன்ற கூடுதல் எஸ்.பி. குமார் மற்றும் டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோருக்கு உடனடியாக பணி நியமனம் கொடுத்தது எந்த வகையிலான உணர்வு?


இரட்டைக் கொலையை மறைக்க முதலமைச்சரின் உத்தரவில் செயல்பட்டதால்தானே நீதிமன்ற அவமதிப்பில் ஆஜரான ஈரம் கூட காய்வதற்கு முன்- உயர்நீதிமன்றத்தில் ஆஜரான சில மணி நேரங்களிலேயே அவர்களுக்கு போஸ்டிங் கொடுக்கப்பட்டுள்ளது?


ஆகவே, “பட்டுப்போன இதயமும்” “பாவிகளின் மனப்பான்மையும்” கொண்டு மக்கள் பணத்தை ஈவு இரக்கமற்ற முறையில் கொள்ளையடித்து வருவது போல்- அப்பாவிகள் காவல் நிலையத்தில் வைத்துக் கொல்லப்பட்டதை மறைத்திட இரவு பகல் “தூங்காமல்” திசைதிருப்பும் பணிகளில் ஈடுபடும் அ.தி.மு.க. ஆட்சிக்கும்- மக்களின் உணர்வுகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை!


READ | தமிழகத்தில் மேலும் 3,882 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்வு...


சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடத்தப்பட்டுள்ள இரட்டைக் கொலை மனித உரிமைகளை மீறியது. சட்டத்தின் ஆட்சியைப் படுகொலை செய்திருப்பது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள கைது வழிகாட்டுதல்கள் அத்தனையையும் மீறிய அநாகரிகமான- கொலை பாதகச் செயல். அதில் உயிரிழந்திருப்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் கடையைத் திறந்து வைத்திருந்தவர்கள். காவல் நிலைய விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டவர்கள். தன் கணவரையும்- மகனையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்த திருமதி. ஜெயராணியின் கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் இன்று ஒவ்வொரு இல்லத்துத் தாய்மார்களின் கண்களையும் குளமாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை அமைச்சர் காமராஜ் புரிந்து கொள்ள வேண்டும். இது ஏதோ “தான் வீடுகாலி பண்ணும் வேலையோ” அதற்கு “30 லட்சம் வாங்கி மோசடி செய்த வேலை போன்றதோ அல்ல” என்பதை அமைச்சர் திரு. காமராஜ் தெரிந்துகொள்ள மனதில் ஈரமில்லாமல் இருக்கலாம். ஆனால் இரட்டைக் கொலையை ஏதோ “தவறான தகவல்கள்” என்று மனச்சாட்சியை அடகு வைத்து விட்டு- அற்ப ஊழல் செய்வதற்காகப் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.