ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த அதிரடி மூவ் பலனளிக்குமா?
ADMK : இப்போது முடிவுக்கு வரும்.. அப்போது முடிவுக்கு என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் செல்கிறது. அடுத்தடுத்த அறிக்கைகளை வெளியிட்டு ஓ.பன்னீர்செல்வம் காட்டும் அதிரடி அவருக்கு பலனளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபிறகும் இன்னும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் மாறி மாறி அறிக்கை விட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களைக் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்ததோடு, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தின் அதிமுக எம்.பி. அந்தஸ்தை நீக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கட்சி அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது அவருக்கு சாதகமான சூழலாக பார்க்கப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் மேற்கொண்ட முதல் டெல்லி பயணம் இதுவாகும்.
இந்த விழாவில் பங்கேற்ற பின் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டு இருந்த நிலையில், அதற்கு அவர்கள் இருவரும் நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் அவசரம் அவசரமாகச் சென்னை திரும்பினார்.
மேலும் படிக்க | அதிமுகவின் புதிய மாவட்டச் செயலாளர்கள் - ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ்
இதே போல, நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த குட்கா வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்க, சிபிஐ தமிழக அரசை அணுகியிருப்பது, எடப்பாடி பழனிசாமி தரப்பையோ அல்லது இந்த ஒற்றைத் தலைமையோ மத்திய அரசு ஊக்குவிக்க விரும்பவில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இது ஒருபக்கம் இருக்க மறு பக்கம் ஓ.பன்னீர்செல்வம் புதிதாக மாவட்டச் செயலாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது செல்லாது என ஆர்பிஐக்கும், ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருத வேண்டாம் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டுமென மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தனக்கே உள்ளதென எடப்பாடி பழனிசாமி கூறும் நிலையில், நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் மூலம் கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ஓ.பன்னீர்செல்வமும் முயன்று கொண்டு தான் இருக்கிறார்.
ஒற்றைத்தலைமை வேண்டுமென அதிமுகவுக்குள் எழுந்த பூசல், இன்றளவும் ஒரு முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே தான் செல்கிறது. இதற்கு எப்போது முடிவு கிட்டும் என்ற கேள்வி ஒருபுறமிறமிருக்க அது அதிமுகவுக்கு எந்த விதமான பலனைத் தரும் என்ற கேள்வி மற்றொரு புறம் எழுகிறது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் மோடி அனுமதி கேட்க வேண்டி இருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் இரண்டிலுமே அதிமுக ஒதுக்கிய இடங்களிலேயே பாஜக போட்டியிட நேர்ந்தது.
இதே நிலையை, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கடைப்பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. ஒற்றைத் தலைமை அதிமுகவின் அதிகாரத்தையும், நிலையையும் மேம்படுத்த உதவுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | பழனிசாமியால் நீக்கப்பட்டவர்கள் கட்சி பணியாற்ற ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ