துபாயிலிருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்த இளைஞர்- லாட்ஜில் அடைத்து வைத்து கொடுமை..!
துபாயிலிருந்து 1 கிலோ தங்க கட்டிகளை கொண்டு வந்து கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்காத இளைஞரை தனியார் விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதான செல்லப்பன். இவர் துபாயில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி 29-தேதியன்று துபாயிலிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காகத் துபாய் விமான நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அருண் பிரசாத் என்பவர் செல்லப்பனிடம் அறிமுகமாகி இருக்கிறார். மெல்ல மெல்ல நலம் விசாரிப்பது போலவும், சொந்த மண் வாசம் குறித்து நெஞ்சை குளறும்படி பேசிய அருண் பிரசாத், செல்லப்பனிடம் திடீரென்று வலை விரித்திருக்கிறார். சுமார் 1 கிலோ தங்க கட்டிகளை கொடுத்து குஜராஜ் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தன்னுடைய நண்பரிடம் ஒப்படைக்குமாறு கூறியிருக்கிறார். தங்க கட்டிகளை பார்த்ததும் பதறிப்போன செல்லப்பன் முதலில் அதை வாங்க மறுத்துள்ளார். அதற்கு தங்க கட்டியை பத்திரமாக ஒப்படைத்தால் ஒரு லட்சம் கமிஷனாக கொடுக்கிறேன் என்று அருண் பிரசாத் வார்த்தைகளை அள்ளிவிட்டிருக்கிறார். உடனே தங்க கட்டிகளை துபாயிலிருந்து இந்தியாவிற்கு எடுத்துவர செல்லப்பனும் சம்மதம் தெரிவித்தார்.
தங்க கட்டிகளை தனது ஆசனவாயில் பதுக்கி வைத்து விமானத்தில் கடத்தி வந்துள்ளார். அதில் வலி ஏற்பட்டு ரத்தம் வரவே அவருடன் பயணித்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனிஷ் குமார் என்பவரிடம் தங்க கட்டிகளை ஒப்படைத்து விட்டு செல்லப்பன் சென்னை வந்து இறங்கியதாக தெரிகிறது. இதையடுத்து தங்க கட்டிகளை வாங்க செல்லப்பனை தேடி வந்த 7 பேர் கொண்ட கும்பலுக்கு தங்கம் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து தங்க கட்டிகளை கொடுத்து அனுப்பியதாக சொல்லப்படும் அனிஷ் குமாரை கண்டுபிடிக்க கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு செல்லப்பனை அழைத்துக்கொண்டே சுற்றித் திரிந்திருக்கிறார்கள். ஆனால் கடைசி வரை அனீஷ்குமாரை கண்டுபிடிக்க முடியாமல் போனது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் தங்க கட்டிகள் கிடைக்கும் வரை உன்னை விட மாட்டோம் என்று கூறி செல்லப்பனை கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள தனியார் விடுதியில் சுமார் 40 நாட்களாக செல்லப்பனை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. கடுமையான தாக்குதலுக்கு உள்ளான செல்லப்பனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. இனியும் விட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கடத்தல் கும்பல் பழைய மகாபலிபுரம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் செல்லப்பனை சிகிச்சைக்காக சேர்த்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
மேலும் படிக்க | திருப்பூர் : பெற்ற தந்தையை மகனே கொலை செய்த கொடூரம்..!
இந்நிலையில், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சென்னை வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சென்னை வடக்கு கடற்கரை காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் படி தீவிர தேடுதலில் கடத்தல் கும்பலை சேர்ந்த 27 வயதான முகமது இந்தியாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தப்பித்து ஓடி தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | இளம்பெண்கள் கடத்தல் - தமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய முன்னாள் ஆசிரியர் கைது..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR