Nepal: இந்தியாவுக்கு எதிரான மற்றுமொரு அசட்டுத் துணிச்சல் நடவடிக்கை!!!
நேபாளத்தின் பள்ளி புத்தகங்களின் பாடத்திட்டத்தில் புதிய புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதில் நேபாளத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மூன்று பிராந்தியங்களைக் காட்டும் திருத்தப்பட்ட அரசியல் வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன.
காத்மாண்டு: நேபாளத்தின் பள்ளி புத்தகங்களின் பாடத்திட்டத்தில் புதிய புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதில் நேபாளத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மூன்று பிராந்தியங்களைக் காட்டும் திருத்தப்பட்ட அரசியல் வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன. நேபாளத்தின் புதிய வரைபடத்தில், இந்தியாவின் லிபுலேக், காலாபாணி மற்றும் லிம்பியாதுரா பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்த பின்னர், இந்தியா அதை 'எல்லைகளின் செயற்கை விரிவாக்கம்' (artificial expansion of borders) என்று அழைத்தது. தற்போது இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின், கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பாடத்திட்ட மேம்பாட்டு மையம் சமீபத்தில் திருத்தப்பட்ட வரைபடங்களுடன் பாட புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
'Reading Material on Nepal's Territory and Boundary Issues' என்ற தலைப்பில் புதிய புத்தகங்கள் ஒன்பதாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் புத்தகத்திற்கு நேபாள அமைச்சர் கிரிராஜ் மணி போகரேல் முன்னுரை எழுதியுள்ளார்.
உத்தரகண்ட் பிராந்தியங்களில் உரிமைகோரல்கள்
2019 நவம்பர் மாதத்தில் இந்தியா புதிய வரைபடத்தை வெளியிட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, தனது நாட்டின் திருத்தப்பட்ட அரசியல் மற்றும் நிர்வாக வரைபடத்தை நேபாளம் கடந்த மே மாதம் வெளியிட்டது. அதில் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மூன்று பகுதிகள் இடம் பெற்றிருந்தன.
புதிய வரைபடத்திற்கு நேபாள அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர், ஊடகங்களிடம் பேசிய அப்போதைய அரசாங்க செய்தித் தொடர்பாளரும் நிதியமைச்சருமான யுவராஜ் காதிவாடா, அரசியலமைப்பின் அட்டவணையை புதுப்பிக்கவும், திருத்தப்பட்ட வரைபடத்தை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த இந்தியா, இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது என்று உறுதியாக கூறியிருந்தது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா பேசுகையில், "எல்லை விரிவாக்கத்தின் செயற்கையான கூற்றுக்கள் வரலாற்று உண்மைகள் அல்லது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, தற்போது நேபாளம் நடந்துக் கொள்வது சரியல்ல" என்று கூறியிருந்தார். இதனால் எல்லைப் பிரச்சினைகளில் இரு நாடுகளிடையே உருவாகியிருந்த புரிதல் மீறப்பட்டதை இந்திய தரப்பு சுட்டிக்காட்டியது.
நேபாளம் காலாபாணி பகுதியையும் தன்னுடையதாக இணைத்ததுடன் அதை தனது நாட்டு நாணயங்களிலும் பதிவு செய்ய நேபாள அரசு முடிவு செய்துள்ளது.
நாணயங்களை தயாரிக்கும்போது, அதில் பொறிக்கப்படும் வரைபடங்களில், மாற்றியமைக்கப்பட்ட வரைபடங்களை பயன்படுத்த நேபாள தேசிய வங்கிக்கும் நேபாள அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.