ஆட்டம் காணும் நேபாள பிரதமரின் பதவி, ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக இந்தியா மீது குற்றச்சாட்டு
சீனா ஆட்டுவிக்கும் விதத்தில் ஆடிக்கொண்டிருக்கும் நேபாள பிரதமர் கெபி ஷர்மா ஓலியின் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. தன் ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்திற்கு இந்தியாவை நேரடியாக குற்றம் சாட்டுகிறார் நேபாள பிரதமர்.
காட்மண்டு: சீனாவின் (China) கையில் ஒரு பொம்மையாகிவிட்ட நேபாள பிரதமர் கெ.பி.ஷர்மா ஓலியை (KP Sharma Oli) தன் பதவி குறித்த அச்சம் ஆட்கொண்டுவிட்டது. இதன் காரணமாக அவர், தேவையின்றி இந்தியாவை (India) குற்றம் சாட்டி வருகிறார். வரைபட விவகாரத்திற்குப் பிறகு, தன் ஆட்சியைக் கவிழ்க்க இந்தியா முயற்சித்து வருவதாக ஓலி குற்றம் சாட்டுகிறார். உண்மையில், சீனாவுடன் தோழமையும் இந்தியாவுடன் விரோத மனப்பான்மையும் காட்டும் ஓலி மீது அவர் நாட்டு மக்களே விரோதம் காட்டி வருகின்றனர்.
காட்மண்டுவில் ஞாயிறன்று ஒரு நிகழ்வில் பேசிய நேபாள பிரதமர் (Prime Minister of Nepal), இந்தியா வரைபட விவகாரம் குறித்து நேபாள அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறதென்றால், அந்த முயற்சி உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்று கூறினார். மேலும், கடந்த முறை தான் பிரதமராக இருந்தபோது, சீனாவுடனான வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உடனேயே பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், இம்முறையும் அதே சதி நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
READ | சீனா, நேபாளத்தை அடுத்த தற்போது பூட்டானும் இந்தியாவின் தலைவலியாக மாறுகிறதா?
நேபாளத்தின் (Nepal) தற்போதைய அரசாங்கம் கொரோனா பெருந்தொற்றை கையாள்வதில் பெரும் தோல்வி அடைந்துள்ளது. இது தவிர, சீனாவுடன் பிரதமர் ஓலிக்கு உள்ள நட்பின் காரணமாக, ஏற்கனவே நேபாளத்தின் பல பகுதிகள் சீனாவிடம் சென்று விட்டன. இவற்றின் காரணமாக நேபாளத்தில் தீவிர அதிருப்தி உள்ளது. எதிர்கட்சிகள் மட்டுமின்றி பொது மக்களும் அவருக்கு எதிராக உள்ளனர். இந்த இறுக்கத்தைக் குறைக்க, ஓலி, தன் ஆட்சியைக் கவிழ்க்க முயல்வதாக இந்தியா மீது குற்றம் சாட்டுகிறார்.
பல காரணங்களுக்காக நேபாளத்தில் பல எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (Nepal Communist Party) நிலைக்குழு கூட்டத்தில், ஓலி, கட்சியின் இணைத் தலைவர் புஷ்பா கமல் தஹலின் விமர்சனங்களை எதிர்கொண்டார். முன்னதாக, ஓலி, நேபாளத்தின் புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டார். இதில் இந்தியாவின் பகுதிகளான லிம்பியாதூரா, மஹாகாளி மற்றும் லிபுலேக் ஆகியவை நேபாள பகுதிகளாக காட்டப்பட்டிருந்தன. இதுமட்டுமின்றி, நேபாளத்தில் கொரோனா பரவலுக்கும் ஓலி இந்தியாவையே குற்றம் சாட்டியிருந்தார்.
READ | சீனாவின் உத்தரவின் பேரில் நேபாளம் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கிறதா?