சீனாவின் உத்தரவின் பேரில் நேபாளம் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கிறதா?

சீனாவின் வழிகாட்டுதல்களின் கீழ் இயங்கும் நேபாளம், இந்திய விரோத பிரச்சாரத்தை  (anti-India campaign) முன்னெடுத்துச் செல்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jun 22, 2020, 08:32 PM IST
சீனாவின் உத்தரவின் பேரில் நேபாளம் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கிறதா?
Photo: Zee Media Network

புதுடெல்லி: சீனாவின் வழிகாட்டுதல்களின் கீழ் இயங்கும் நேபாளம், இந்திய விரோத பிரச்சாரத்தை  (anti-India campaign) முன்னெடுத்துச் செல்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நேபாளி எஃப்.எம் (FM RADIO) வானொலி இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை எல்லைப் பகுதிகளில், ஒளிபரப்பி வருகிறது.  காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா (Kalapani, Lipulekh, Limpiyadhura) போன்ற இந்திய பிராந்தியங்களில் இந்த பிரச்சாரங்கள் வேகம் பிடித்துள்ளன.   வானொலியில் நேபாளி பாடல்களுக்கு இடையில் இந்தியாவுக்கு எதிரான போக்கும் வெளிப்படுவதை காணமுடிகிறது.

அண்மையில் நேபாளம் வெளியிட்ட தனது நாட்டின் வரைபடத்தில் (Nepal Map) இந்திய பிரதேசங்களை தன்னுடையதாக காட்டியிருப்பது சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.   இதன் பின்னணியில் இருப்பது, சீனா என்றும், அதனால் தான் தனது சர்ச்சைக்குரிய செயலில் இருந்து   பின்வாங்க நேபாளம் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.

புதுடெல்லிக்கு எதிரான காத்மாண்டுவின் இந்த பிரச்சாரத்தில் சில நேபாளி வானொலி சேனல்களில் இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் பிரச்சாரத் திட்டங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Read Also | இனி நேபாளம், பூடான் செல்ல ஆதார் அட்டை போதும்!

"சில நேபாளி எஃப்எம் வானொலி ஒலிபரப்புகளில் நேபாளி பாடல்களுக்கு இடையில் இந்திய எதிர்ப்பு உரைகள் கூறப்படுகின்றன" என்று பித்தோராகரின் தர்ச்சுலா துணைப்பிரிவின் டந்து கிராமத்தில் வசிக்கும் ஷாலு தத்தால் என்பவர் கூறுகிறார். அத்துடன் வானிலை தொடர்பான தகவல்களை வழங்கும் யோசனைகளும் தொடங்கப்பட்டன.

இந்த வானொலி நிலையங்கள் இப்போது நேபாளத்தின் மற்ற பகுதிகளின் வானிலைத் தகவல்களை வழங்குவதைப் போலவே கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றின் வானிலை பற்றிய தகவல்களை வழங்கத் தொடங்கியுள்ளன என்று தார்ச்சுலாவைச் சேர்ந்த ரங் சமூகத் (Rang community) தலைவர் கிருஷ்ணா கர்பியால் (Krishna Garbiyal) கூறுகிறார். நேபாளத்தின் தார்ச்சுலாவில் உள்ள மாவட்ட தலைமையகத்திற்கு அருகிலுள்ள சபரிகரில் அமைந்துள்ள FM வானொலி நிலையங்களிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சிகளைக் கேட்கலாம். எனவே, எல்லையில் இந்திய பகுதிகளில் வசிக்கும் மக்களும் நேபாளி வானொலியைக் கேட்கிறார்கள்.

Read Also | இந்தோ-நேபாளம் சாதாரணமானது அல்ல, 'ரோட்டி-பேட்டி'யால் பிணைக்கப்பட்டுள்ளது: ராஜ்நாத் சிங்

நேபாளி எஃப்.எம் ரேடியோவில் ஒளிபரப்பப்படும் இந்திய விரோத திட்டங்கள் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கூறுகின்றன. பித்தோகார்க் (Pithoragarh) பிராந்திய காவல்துறை கண்காணிப்பாளர் ப்ரீதி பிரியதர்ஷினியிடம் இதுகுறித்து பேசினோம். 'இது தொடர்பாக புலனாய்வுத்துறையிடம் (Intelligence) இருந்து வந்த எந்தவொரு தகவலோ அல்லது எச்சரிக்கையோ கிடைக்கவில்லை' என்று அவர் கூறுகிறார். தர்ச்சுலா வட்ட அலுவலர் வி.கே.ஆச்சார்யாவும் இது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பேசும் வியாஸ் பள்ளத்தாக்கின் தலைவர் அசோக் நபியல் (Ashok Nabiyal), எல்லையில் செயல்படும் இந்திய புலனாய்வு அமைப்புகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், அப்போதுதான் உரிய சமயத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்று கவலை தெரிவிக்கிறார்.

நேபாள பிரதமர் KP.சர்மா ஓலி தலைமையிலான அரசாங்கம், இந்திய பிராந்தியங்களின் சில பகுதிகளை தனது பகுதிகளாக குறிப்பிட்டுக் காட்டும் புதிய வரைபடத்தை வெளியிட்டதை அடுத்து, இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.  நேபாளத்தின் கோரிக்கைக்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்று கூறி புதிய நேபாள வரைபடத்தை இந்தியா நிராகரித்துள்ளது.