கர்நாடகம்: 14 அமைச்சர்கள் நீக்கம், முதல்வர் சித்தராமையா நடவடிக்கை

Last Updated : Jun 20, 2016, 09:59 AM IST
கர்நாடகம்: 14 அமைச்சர்கள் நீக்கம், முதல்வர் சித்தராமையா நடவடிக்கை title=

கர்நாடக மாநில அமைச்சரவையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது மூன்றாண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு 2018-ல் நடக்கவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு தமது அமைச்சரவையை மாற்றியமைக்க சித்தராமையா அவர்கள் டில்லியில் மூன்று நாள்கள் முகாமிட்டு, கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைச்சரவையை மாற்றியமைக்க அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து கர்நாடக அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டது.

இதுதொடர்பாக மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை பெங்களூரில் சந்தித்த முதல்வர் சித்தராமையா, அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவோரின் பெயர்ப் பட்டியலை அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் வஜுபாய் வாலா, 14 பேரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். 

14 அமைச்சர்கள் விவரங்கள்:  கமருல் இஸ்லாம், ஷாமனூர் சிவசங்கரப்பா, வி.சீனிவாஸ் பிரசாத், எம்.எச்.அம்பரீஷ், வினய்குமார் சொரகே, சதீஷ் ஜார்கிஹோளி, பாபுராவ் சின்சான்சூர், சிவராஜ் சங்கப்பா தங்கடகி, எஸ்.ஆர்.பாட்டீல், மனோகர் தாசில்தார், கே. அபய சந்திர ஜெயின், தினேஷ் குண்டுராவ், கிம்மனே ரத்னாகர், பி.டி.பரமேஸ்வர் நாயக் ஆகிய 14 பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.

13 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு:நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் காகோடு திம்மப்பா, கே.ஆர். ரமேஷ்குமார், பசவராஜ் ராயரெட்டி, எச்.ஒய்.மேட்டி, தன்வீர் சேட், எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன், எம்.ஆர்.சீதாராமன், சந்தோஷ் லாட், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகிய 9 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், பிரமோத் மத்வராஜ், ஈஸ்வர் கண்ட்ரே, ருத்ரப்பா லாமணி, பிரியாங்க் கார்கே ஆகிய 4 பேரும் இணையமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். காலியாக உள்ள ஒரு இடத்திற்கு விரைவில் அமைச்சர் நியமிக்கப்படலாம்.

இந்த நிகழ்ச்சியில் மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநில தலைமைச் செயலர் அரவிந்த் ஜாதவ், காவல் துறைத் தலைவர் ஓம் பிரகாஷ், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் மேகரிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Trending News