கொரோனாவில் இருந்து விலக்கு கிடைத்தாலும், விலங்குகளைக் கண்டு நடுங்கும் பக்தர்கள்
கொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் முடங்கிய பக்தர்கள் அன்லாக்கிற்கு பிறகு கோவிலுக்கு சென்றால் அச்சுறுத்தும் விலங்குகள்
புதுடெல்லி: மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு நாட்டில் முதன்முறையாக பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அந்த நிலையில் ஆலயங்கள், மசூதிகள், கிறித்துவ தேவாலயங்கள் உட்பட அனைத்து மதத் தளங்களும் மூடப்பட்டன.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி கோவிலும் கொரோனா பரவலை முன்னிட்டு மூடப்பட்டது. பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், வழக்கமான பூசைகளும், சடங்குகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
லாக்டவுன் அறிவிப்பு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அதில் தளர்வுகளும் கொடுக்கப்பட்டன. மதத் தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கலாம் என்று அரசு அனுமதி கொடுத்தது.
Also Read | கோயில்களுக்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனலைத் தொடங்கும் தமிழக அரசு
அதன்படி, பல்வேறு ஆலயங்களும் திறக்கப்பட்டன. ஆந்திரப்பிரதேசத்தில் இருக்கும் திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வரர் கோவிலும் திறக்கப்பட்டது. மலைப் பகுதியில் இருக்கும் திருப்பதி கோவிலுக்கு வழக்கமாக பெருமளவில் பக்தர்கள் வருவார்கள்.
சரித்திரத்திலேயே முதன்முறையாக நீண்ட நாள் பக்தர்கள் வருகை இல்லாமல் இருந்த நிலையில், மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக குறைந்து போனது. அப்போது, மலைப் பகுதிகளில் இருந்த விலங்குகள் சுதந்திரமாக உலா வரத் தொடங்கின.
இந்நிலையில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் மக்களின் வரத்து தொடங்கியுள்லது. ஆனால், திருப்பதி மலைப்பகுதியில் மக்கள் வாழும் இடங்களில் சிறுத்தைப் புலி, கரடி உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
Also Read | COVID-19 தொற்றுநோய்: அமர்நாத்தில் முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட ஆர்த்தி
மிருகங்களின் நடமாட்டம் மக்களிடையேஅச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி மலையில் உள்ள பாலாஜி நகர்ப் பகுதியில் சிறுத்தைப் புலி ஒன்று நடமாட்டம் இருந்தது தொடர்ந்து பலமுறை உறுதி செய்யப்பட்டது.
அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் சிறுத்தைப் புலியின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. தற்போது சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.
விலங்குகளின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்திருக்கும் திருப்பதி தேவஸ்தான வாரியம், தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரவு நேரத்தில் விலங்குகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்த பாலாஜி நகர் பகுதி உட்பட எங்கும் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
Also Read | பிரதோஷ விரதம் 2020: சிவனை வழிபடுவதற்கான முழுமையான முறை...
திருப்பதி மட்டுமல்ல, நாட்டில் பல்வேறு ஆலயங்கள் மலைப் பிரதேசங்களில் அமைந்துள்ளன. அனைத்துமே முதல்முறையாக நீண்ட நாட்கள் மூடப்பட்டிருந்து தற்போது சிலபல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.
ஒரு கிருமியின் அச்சத்தால் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த மனிதர்கள், அவசியம் இருந்தால் தவிர வெளியே நடமாட வேண்டாம் என்று அனைவரும் அறிவுறுத்தும் நேரத்தில், விலங்குகள் கொரோனா பற்றிய அச்சமில்லாமல் சுற்றித் திரிவதை பார்க்கும் போது காலத்தின் கோலம் தான் இது என்று சொல்லத் தோன்றுகிறது.
சபரிமலை உட்பட கேரளாவில் உள்ள பல கோவில்கள் தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ளன. சபரிமலைக்கு நீண்ட தொலைவு வனப்பகுதியின் வழியாக நடந்துச் செல்ல வேண்டும். கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பிறகும் பக்தர்கள் தெய்வங்களை தரிசிப்பதற்காக செல்லும்போது வேறுவிதமான அச்சங்களையும் இடர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.