மீண்டும் நீட் ரிசல்ட்... இந்த முறை தேர்வு மையம் வாரியாக வெளியிட உத்தரவு - இதன் பின்னணி என்ன?
NEET Leak Case: நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு விசாரணையில், தேசிய தேர்வு முகமைக்கு (NTA) உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
Supreme Court Order On NEET Leak Case: மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் இந்தாண்டில் கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் பேர் இந்தாண்டு நீட் தேர்வை எழுந்தினர். பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்வுக்கு முன்னரே நீட் வினாத்தாள் வெளியானதாக பரபரப்பு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
நீட் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது. தொடர்ந்து, நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதன் விசாரணை இன்றும் நடைபெற்றது.
'மறு தேர்வு நடத்த முடியாது'
முன்னதாக, இன்றைய விசாரணையில் மறு தேர்வு நடத்த வேண்டும் என பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சில வழக்கறிஞர்கள்,"ஒட்டுமொத்தமாக மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் மறுத்தேர்வு நடத்தினால் போதும் என்று தான் கேட்கிறோம்" என வாதிட்டனர்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபத, மறு தேர்வை நடத்த உத்தரவிட முடியாது. ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்ற உறுதியான தகவல் கிடைத்த பிறகுதான், அதை செய்ய முடியும். சமூக சீர்கேடுகள் தொடர்பான விவகாரம் என்பதால் நீட் தேர்வுக்கு இந்த நீதிமன்றம் முக்கியத்துவம் வழங்குகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இன்றைய வழக்கிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினமே இந்த வழக்கின் விசாரணையை நடத்துவோம்" என்றார்.
மையங்கள் வாரியாக தேர்வு முடிவுகள்
இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மாலை வரை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் முடிவில் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) முக்கிய உத்தரவு ஒன்றையும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. அதில், இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் தேர்வு நடந்த நகரங்கள் வாரியாகவும், தேர்வு மையங்கள் வாரியாகவும் முழுமையாக வரும் ஜூலை 20ஆம் தேதி மதியத்திற்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அதில் மாணவர்களின் அடையாளங்களை மறைத்து முடிவுகளை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்வு முடிவுகள் கடந்த மாதமே வெளியிடப்பட்டாலும், அவை மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட மதிப்பெண்களை மட்டும் அறிந்துகொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்த உத்தரவு மனுதாரர்கள் அளித்த மனுவை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, மதிப்பெண்களை பொதுவெளியில் அறிவிப்பதன் மூலம் தேசிய தேர்வு முகமை மீதான மக்களின் நம்பிக்கை என்பது அதிகரிக்கும் என்று அவர்கள் வாதிட்டனர்.
எதிர்ப்பும், உத்தரவின் காரணமும்!
இருப்பினும் இந்த வாதத்திற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் தேசிய தேர்வு முகமை ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக, தேர்வு முடிவு என்பது ஒரு மாணவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால் அவற்றை பொதுவெளியில் அறிவிக்கக் கூடாது என வாதிடப்பட்டது. இருப்பினும், மாணவர்களின் தனிப்பட்ட அடையாளத்தை மறைத்தே முடிவுகளை வெளியிட உத்தரவிட்டிருப்பதாக கூறி, சொலிசிட்டர் ஜெனரலின் வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடங்கிய மூன்று பேர் அமர்வு இதுகுறித்து தங்களின் உத்தரவில்,"பாட்னா (பீகார்) மற்றும் ஹசைர்பாக் (ஜார்க்கண்ட்) நகரங்களில் நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. வினாத்தாள்கள் அதிகமானோருக்கு பரவியிருக்கலாம். இது அந்த மையங்களுக்குள் மட்டும் நடந்ததா அல்லது பரவலாக நடந்ததா என்பதைக் கண்டறிய விரும்புகிறோம்" என குறிப்பிட்டுள்ளது. இதனாலேயே நகரங்கள் வாரியாகவும், அதன் தேர்வு மையங்கள் வாரியாகவும் மாணவர்களின் அடையாளத்தை மறைத்து தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"முடிவுகள் தெரியாததால் மாணவர்கள் குழப்பத்தில் இருப்பார்கள். மாணவர்களின் அடையாளம் மறைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் தேர்வு மையம் வாரியாக, மதிப்பெண்கள் எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க விரும்புகிறோம்" என்றது. மேலும், இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை என தெரிகிறது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ