அன்லாக் 2.0: பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
பிரதமர் மோடி சற்று நேரத்திற்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றும் போது விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு நாம் புரியவைக்க வேண்டும், தடுக்க வேண்டும், அது அவசியமானது என்று குறிப்பிட்டார்
பிரதமர் மோடி சற்று நேரத்திற்கு முன் நாட்டிற்கு உரையாற்றினார். லாக்டவுனுக்கு பிறகு அன்லாக் என்ற நடைமுறை தொடங்கப்பட்டு, தளர்வுகள் கொடுக்கப்பட்ட பின் மக்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் நடந்துக் கொள்ளவேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு நாம் புரியவைக்க வேண்டும், தடுக்க வேண்டும், அது அவசியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் பிரதமர் பொது இடத்திற்கு செல்லும்போது முகக்கவசம் அணியாமல் சென்றதால் அவருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சட்டத்தைவிட யாரும் மேம்பட்டவர்கள் கிடையாது. நம் நாட்டில் பிரதமர் முதல் சாமனியர் வரை அனைவருக்கும் சட்டமும், விதியும் ஒன்றே தான் என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட லாக்டவுனால் பல்லாயிரக்காண உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
Also Read | உலகளவில் COVID-19 பாதிப்பு நிலவரம் மற்றும் பட்டியல்
கரீஃப் கல்யாண் திட்டத்திற்காக 2.50 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று குறிப்பிட்ட பிரதமர் மேலும் ஐந்து மாதங்களுக்கு அதாவது நவம்பர் மாதம் வரை ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். குடும்பம் ஒன்றுக்கு கோதுமை அல்லது அரிசி தலா ஐந்து கிலோ கொடுக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 80 கோடி மக்களுக்கு பலனளிக்கும் இந்த உணவு தானிய இலவசத் திட்டத்திற்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று பிரதமர் தனது அன்லாக் 2.0 உரையில் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்தையும், சூழலையும் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறிய பிரதமர், மக்களின் ஒத்துழைப்புடன் தான் இலக்குகளை எட்ட முடியும் என்று பிரதமர் தெரிவித்தார். நேர்மையாக வரி செலுத்துபவர்களால் தான் இந்த சூழலை சமாளிக்க முடிகிறது என்று வரி செலுத்துபவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பிரதமர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மழைக்காலம் தொடங்கவுள்ள சூழ்நிலையில், மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும். அத்துடன் தற்போது பல்வேறு பண்டிகைகளும் வரவிருக்கும் நிலையில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக்க்கவசம் அணிவது, சுகாதாரத்தை பராமரிப்பது போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
Also Read | ஜூலை 31 வரை தமிழ்நாட்டில் லாக்டவுன் நீட்டிப்பு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் முதல்கட்டமாக தளர்த்தப்பட்டது. நாளை முதல் இரண்டாம் கட்ட தளர்வுகள் அதாவது அன்லாக் 2.0 நடைமுறைக்கு வரும் நிலையில் சிறிய அலட்சியம் கூட மாபெரும் பாதகத்தை ஏற்படுத்தி விடும் என்று பிரதமர் முன்னெச்சரிக்கை விடுத்தார்.
முதல்கட்ட தளர்வின்போது காட்டப்பட்ட அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்ததை கவனத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அதிகாரிளும் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.