வறுமையில் வாடும் பிரபல நடிகர்..வீடு கூட இல்லாமல் பிளாட்பார்மில் வாழும் அவலம்!
குக்கூ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த இளங்கோ, தற்போது வீடு இன்றி பிளாட்பார்மில் வாழ்ந்து வருகிறார்.
2014ஆம் ஆண்டு வெளியான ‘குக்கூ’ படத்தில் அட்டகத்தி தினேஷின் நண்பராக நடித்திருந்தவர், இளங்கோ. இவர், தற்போது தங்குவதற்கு வீடு கூட இன்றி பிளாட்பார்மில் தங்கி இருக்கிறார்.
குக்கூ பட நடிகர்..
ராஜூ முருகன் இயக்கத்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம், குக்கூ. இந்த படத்தில், அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக மாளவிகா நாயர் நடித்திருந்தார். கண் பார்வையற்றவர்கள் தினசரி அவர்களின் வாழ்வில் சந்திக்கும் சவால்களையும் பிரச்சனைகளையும் காண்பித்திருப்பர். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. கண் பார்வயைற்றவர்களை வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், உண்மையாகவே கண் தெரியாதவர்கள் பலரும் நடித்திருந்தனர். குறிப்பாக கதாநாயகன் தினேஷிற்கு நண்பராக ஒரு கண்பார்வையற்ற நபர் நடித்திருப்பார். இவரது பெயர் இளங்காே.
குக்கூ படத்திற்கு பிறகு, நடிகர் இளங்கோவை வேறு எந்த படங்களிலும் பார்க்க முடியாமல் போனது. இந்த நிலையில்தான், இவர் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தங்குவதற்கு வீடு கூட இல்லாமல்..
குக்கூ பட நடிகர் இளங்கோ, தற்போது தங்குவதற்கு வீடு இன்றி பிளாட்பாரத்தில் தங்கியிருக்கிறார். இவரது நிலையை பார்த்த பிரபல யூடியூப் சேனல் ஒன்று, இவரிடம் பேட்டி எடுத்துள்ளது. அதில், தனது நிலையை இளங்கோ விளக்கியிருக்கிறார். அந்த வீடியோவில் இளங்கோ, தனது சொந்த ஊர் தஞ்சாவூர் என குறிப்பிட்டிருக்கிறார். 2014ஆம் ஆண்டு வெளியான குக்கூ படத்திற்கு பிறகு தனக்கு வேறு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், 2019ஆம் ஆண்டு தன்னை தண்டச்சோறு என பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறுகிறார்.
மேலும் படிக்க | பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்! வெளியேறும் ‘அந்த’ 2 போட்டியாளர்கள் யார்?
தனக்கு கண்பார்வை இல்லாததால் தன்னால் வாய்ப்பு தேடி அலைய முடியவில்லை என்று அந்த பேட்டியில் இளங்கோ கூறியிருக்கிறார். அதனால், வழக்கம் போல பாட்டு பாடி வாழ்க்கையை நடத்த முடிவு எடுத்ததாக கூறியிருக்கிறார். கொரோனா காலத்தில் தான் தங்கியிருந்த அறைக்கு வாடகை கொடுக்க முடியாததால் அங்கிருந்து வெளியேறி தற்போது சுரங்கப்பாதையில் தங்கி வருவதாக கூறியிருக்கிறார். தனது செலவுக்கு தற்போது பாட்டுப்பாடி பிச்சையெடுத்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
“அடிக்கின்றனர்..”
வீடு இல்லாமல் பிளாட் பார்மில் தங்கியிருப்பதால் வேண்டுமென்றே தன்னை சிலர் வம்பிழுத்து அடிப்பதாகவும், கண் பார்வை இல்லை என்பதால் அவர்கள் இவ்வாறு செய்வதாகவும் இளங்கோ கண்ணீர் மல்க அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பிறகாவது இவருடன் நடித்த அல்லது உடன் பணிபுரிந்த யாரேனும் உதவி புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் துணை நடிகர்களாக இருப்பவர்கள் வறுமையில் வாடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த வைரவன், உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை மேற்கொள்ளவும் பணம் இல்லாமல் வாடினார். பின்னர் அவருக்கு திரையுலகை சேர்ந்த சிலர் உதவினர். இதே போல நடிகர் பொன்னம்பலமும் தனக்கு சிகிச்சை மேற்கொள்ள பணம் இல்லை என்று கூறி ஒரு வீடியோவை பதிவிட்டார். பின்னர், நடிகர் சிரஞ்சீவி அவரது மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவை ஏற்றுக்கொண்டார். இப்படி, துணை நடிகர்கள் பிற்காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் போவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | த்ரிஷா உள்பட 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு போடும் மன்சூர் அலிகான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ