Manobala: “பாட்டு பாடனுமா..மறந்து போச்சே?” மனோபாலாவின் கடைசி தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ!
சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த மனோபாலாவின் கடைசி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்து வந்தவர் மனோபாலா. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக திரைத்துரையில் இருந்த இவர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர்.
மனோபாலா உயிரிழப்பு:
கடந்த மாதம், மனோபாலாவிற்கு உடல் நலனில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில நாட்கள் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. சிகிச்சைகள் எதுவும் பலனலிக்காத நிலையில் இம்மாதம் 2ஆம் தேதி மனோபாலா காலமானார். அவர் உயிரிழந்ததற்கு மறுநாள் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மனோபாலாவின் இறப்பிற்கு கோலிவுட் நட்சத்திரங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மனோபாலாவின் கடைசி வீடியோ!
நகைச்சுவை நடிகர் மனோபாலா உயிரிழந்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், அவரது இறப்பு செய்தியின் வடு மட்டும் இன்னும் ஆறாமல் ரசிகர்கள் மனங்களில் அப்படியே உள்ளது. இந்த நிலையில், மனோபாலாவின் கடைசி தருணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள அந்த வீடியோவில், மனோபாலா கையை கூட தூக்க முடியாத நிலையில் இருக்கிறார். அவரை உற்சாகப்படுத்தி சாப்பிடவைக்க அவரது குடும்பத்தினர் “பாட்டு பாடலாமா..?” என கேட்கின்றனர். அதற்கு மனோபாலா, “மறந்து போச்சே..” என முனங்குகிறார். இதையடுத்து மனோபாலாவின் மகன் ஹரிஷ் “அழிலும் தொழிலும்” என்ற பாடலை அப்பாவின் கையை பிடித்துக்கொண்டே பாடுகிறார். பலரை தனது நகைச்சுவை திறமையாலும் வசன உச்சரிப்பாலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மனோபாலாவின் கடைசி தருணத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ பலரையும் கலங்க வைத்துள்ளது.
மனோபாலாவின் திரைப்பயணம்:
நடிகர் கமல் ஹாசன் மூலமாக பாரதி ராஜாவின் அறிமுகம் கிடைக்கப்பெற்று அவரிடமே துணை இயக்குநராக சேர்ந்து தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார் மனோபாலா. வாழ்க்கை முழுவதும் சினிமா சினிமா என்றிருந்த மனோபாலா, இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மாபெரும் நடிகர். அது மட்டுமா? 24க்கும் மேற்பட்ட படங்களையும் இயக்கி தான் ஒரு திறமைமிகு இயக்குநர் என்பதை அனைவரிடத்திலும் நிரூபித்தவர் இவர்.
மனோபாலாவின் குடும்பம்:
தன்னை சினிமாவிற்காகவே அர்பணித்த மனோபாலா, அவர் குடும்ப விஷயங்களை பற்றி பெரிதாக ஊடகத்தின் முன்பாக பேசமாட்டார். அவருக்கு ஹரிஷ் என்ற மகன் உள்ளார். அவர்தான், மேற்கண்ட வீடியோவில் பாட்டு பாடியவர். தன் மகனுக்கு 2019ஆம் ஆண்டில் திரையுலகினர் பலரை அழைத்து திருமணம் செய்து வைத்தார் மனோபாலா.
இறுதிவரை சினிமா..
சினிமாவிலேயே தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர் மனோபாலா. கடந்த ஆண்டு தொலைக்காட்சி நிகழ்சியான குக் வித் கோமாளி-3யில் பங்கேற்பாளராக வந்து தனக்கு சமையலும் நன்றாகவே வரும் என்பதை நிரூபித்தார். கடந்த மாதம் கூட, ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிள்ளார் மனோபாலா. ஆனால், உடல் நலன் சரியில்லாத காரணத்தால் மேற்கொண்டு அப்படத்தின் படப்பிடிப்பில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ