சிறகுகளை விரித்து வானில் பறக்கும் மயிலின் இறகுகளின் வண்ணங்கள், நம் மனதின் எண்ணங்களை சிறகடித்துப் பறக்கச் செய்பவை. மயிலின் சிறப்பு புகைப்படத் தொகுப்பு...
மயில்... மயில் என்றாலே அழகான மயிலிறகே முதலில் மனதில் தோன்றுகிறது. இந்தியாவின் தேசியப் பறவை மயில். பறவையினங்களில் மிகவும் அழகான மயில், பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் நிறங்கள் கொண்ட சிறகுகளை மயிலிறகாய் கொண்டவை. அகவும் மயில் அனைவரின் அகத்தையும் கவர்பவை.
பல வண்ணங்களை கொண்ட மயில் கண்கவர் அழகு என்றால், வண்ணங்களே அற்று வெண்மையால் இருக்கும் மயில் தனியழகு. வண்னங்களை துறந்து துறவியான மயிலோ வெண்மயில். வண்ணங்களை துறக்கலாம், ஆனால் அழகை ஒருபோதும் துறக்க முடியாது... வெண்மயில் அழகின் அற்புதம்!!!
இந்து மதத்தில் மயிலுக்கு முக்கிய இடம் உண்டு. முருகனின் வாகனம் மயில். அதுமட்டுமல்ல, கிருஷ்ணன் என்றாலே தலையில் மயில்பீலியை தரித்திருக்கும் கோலமே நினைவுக்கு வருகிறது. சீனாவில் அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படும் மயிலிறகுகள், நேர்மறையான எண்ண அலைகளை ஈர்க்கும் என்பது நம்பிக்கை.
ஆண் மயில்களில், வால்ப் பகுதியின் மேலாகக் காணப்படும் நீண்ட வண்ணமயமான இறகுகளின் தொகுப்பு மயிற்பீலி, மயில் தோகை, மயிலிறகு என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது.
ஆண் மயிலுக்கு தான் இறகு உண்டு. பெண் மயிலை கவர்வதற்கு தனது அழகான இறகுகளை விரித்து வசீகரிக்கும் ஆண் மயில்.
இதுவொரு தோகைமயில் காலம், அதுவொரு கனாக்காலம். எது எக்காலமாய் எக்காளமிட்டாலும் மழைக்காலமே மயில்காலம். மயில் தோகையை விரித்து தோகைமயிலாய் மனம் விரிக்கும் கனாக்காலம்...
மயியின் அழகு மையலாக்கினால், அதனிடம் உன் இறகில் ஒன்றைத் தா என்று கேட்பது நியாயமா?
வானம் இருண்டால் மயிலுக்கு கொண்டாட்டம். மழை வந்தால் மயிலுக்கு மா மகிழ்ச்சி. மகிழ்ச்சியைக் கொண்டாட மயில் நடனமாடத் தொடங்கிவிடுகிறது. அதன் நடனத்தின் அழகு மயில்தோகையாய் விரிந்து பார்ப்பவரின் மனதையும் மதியையும் மயக்குகிறது.
பறக்கும் மயிலை பார்த்ததுண்டா?
மயிலின் அழகு, அதன் குரலைத் திறந்தால் குறைந்து போகும். மயில் அகவும்போது, அந்த சப்தம் வித்தியாசமாய் இருக்கும்
மயில்களை பாதுகாக்க 1972 - ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு சட்டம் இயற்றி பாதுகாக்கிறது.