புதுடெல்லி: தற்போது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பதற்றமே உலகமெங்கிலும் விவாதப் பொருளாகியிருக்கிறது.  ஆனால் வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்த்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இணக்கமாக வருவதும், ஒரு கட்டத்தில் சுணங்கிப் போவது ஒன்றும் புதிதல்ல என்பது நன்றாக புரியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், தற்போது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சில தசாப்தங்களாக நிலவும் நல்லுறவுக்கு வித்திட்டது ராஜீவ் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.


ராஜீவ் காந்தியின் முன் முயற்சியின் பலன் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வதற்கு, சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவுகள், ராஜீவ் காந்தி பிரதமராவதற்கு முன் எப்படியிருந்தன என்பதை தெரிந்துக் கொள்வது அவசியமாகும்.


ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் குறைந்த அளவிலான வர்த்தக உறவுகளே இருந்தன.  இருபதாம் நூற்றாண்டில் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றமானது இந்தியாவிற்கும், சீனாவிற்கும் பொருளாதார ரீதியாக உத்வேகம் கொடுத்தது.


இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ஆம் ஆண்டில் சீன அரசு, இந்தியாவுடனான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தியது.  1949ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியன்று சீனாவின் நிறுவனத் தந்தையான மா சேதுங் தலைமையில் சீன மக்கள் குடியரசு அமைந்தபோது, உடனடியாக அதை அங்கீகரித்த முதல் ஜனநாயக நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்த சதி செய்கிறதா சீனா?


அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இரு நாடுகளும் நட்பாக இருக்க வேண்டும் என்றும், சீனா எதிர்காலத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக இருக்கும் என்றும் கணித்தார். எனவே, சீனாவுடன் நட்பு பாராட்டினார்.  1954 முதல் 1957ஆம் ஆண்டு வரை இரு நாட்டு பிரதமர்களும் பரஸ்பரம் ஒருவர் மற்றொருவரின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு நட்பை பலப்படுத்தினார்கள். 


ஆனால், 1950ஆம் ஆண்டில் திபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது, அமைதி முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. இது தங்கள் உள்நாட்டு விவகாரம் என்று கூறி இந்தியாவின் கருத்தை புறக்கணித்தது சீனா.


சீனாவுக்கும் திபெத்துக்கும் இடையில் 1951ஆம் ஆண்டு மே மாதம் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.  அதையடுத்து, 1954ஆம் ஆண்டில் இந்தியாவும் சீனாவும், வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பான இந்திய-சீன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 


அப்போது, இந்தியாவும், சீனாவும் சகோதரர்கள் என்ற பொருள் கொள்ளும் ’இந்தி-சீனி பாய்-பாய்’ என்ற முழக்கத்துடன் நல்லுறவைத் தொடர்ந்தன.


ALSO READ | World War II வெற்றி விழாவில் பங்கேற்ற இந்திய ராணுவம்; இந்தியாவின் என்ன தொடர்பு? அறிக


ஆனால் காலப்போக்கில் சகோதர உறவு, பங்காளிகளிடையிலான உரசலாக மாறிய நிலையில், திபெத்தின் அன்மீக மற்றும் தற்காலிகத் தலைவர் 14வது தலாய் லாமா இந்தியாவின் தர்மசாலாவில் அடைக்கலம் புகுந்தார்.


இதனால் சீற்றம் கொண்ட சீனா, ஒரு லட்சம் சதுர கி.மீட்டருக்கும் அதிகமான பரப்பளவிலான இந்திய பிராந்தியத்தை தனது பகுதி என்று அறிவித்தது.  இப்படி இருவருக்குமான பங்காளிச் சண்டையும், நிலத் தகராறும் முற்றி 1962ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதியன்று எல்லைப்போராக வெடித்தது.


இறுதியில் ஒரு மாதத்திற்கு பிறகு சீனா ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்து, தான் ஆக்ரமித்த பகுதிகளில் இருந்து சற்று பின்வாங்கியது. 


சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் 1960ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மோசமடையத் தொடங்கின.  பிறகு பாகிஸ்தானுடன் நட்பு கொண்டாடிய சீனா, 1971ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போரில் பாகிஸ்தானுக்கு துணை நின்றது.


அப்போது மோசமடைந்த இந்திய-சீன உறவுகள், 1978ஆம் ஆண்டில் அப்போதைய  இந்திய வெளியுறவு அமைச்சர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெய்ஜிங்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் மூலம் ஓரளவு இயல்புக்கு திரும்பியது. 


ALSO READ | கிழக்கு லடாக்கில் இருந்து பின்வாங்க சீன இராணுவம் ஒப்புக் கொண்டதாக தகவல்!


ஆனால் அதன்பிறகு 1984ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசத்தின் சும்டோரோங் சூ பள்ளத்தாக்கில் இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் மூண்டன.


பிறகு முடங்கிப் போன இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் 1988இல் ராஜீவ் காந்தி சீனாவிற்கு பயணம் மேற்கொண்டபோது புதுப்பிக்கப்பட்டது.


1988-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்காக சீனா சென்றார். அங்கு ராஜீவ் காந்தி - சீனத் தலைவர் டெங் ஜியாவோ பிங் இடையிலான பேச்சுவார்த்தையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுவரை நிலவி வந்த தேக்க நிலையை உடைப்பதாக அந்த முடிவுகள் அமைந்தன.


ALSO READ | சீனாவை ஒடுக்க தொழில்நுட்பமும் சுற்றுலாவும் பலன் தருமா?


ராஜீவ் காந்தி - டெங் ஜியாவோ பிங் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்திய சீன உறவில் தொடர்ந்து பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.


அப்போது, இரு நாடுகளுக்கு இடையில் நல்லுறவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம், பல விதங்களிலும் இருதரப்பு உறவுகளை அதிகரிப்பது, எல்லைப் பிரச்சனைகளை தீர்ப்பது போன்ற பல விஷயங்கள் தொடர்பான கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. 


அதன்பிறகு, 1992இல் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சரத் பவார் பெய்ஜிங்கிற்கு பயணம் மேற்கொண்டார்.  அதன்பிறகு, சிலபல மோதல்கள் தொடர்ந்தாலும், வர்த்தகத்தில் இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் சார்பு நிலையை எட்டின.


1991ஆம் ஆண்டு தாராளமயமாக்கல் கொள்கை தீவிரமடைந்த பிறகு இந்தியா அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டது.


அப்போது, சீனாவும் ராக்கெட் வேகத்தில் முன்னேறியது.  இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சூடு பிடித்தது. 2000ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மூன்று பில்லியன் டாலர்கள் என்ற அளவை எட்டியது. ஆனால் 2018 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் புதிய உச்சங்களை எட்டி, 95.54 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.


ALSO READ | சீன வீரர்கள் 99 நொடிகளில் செய்ததை இந்திய வீரர்கள் 26 நொடிகளில் சாதித்தனர்


ஆசியாவில் இரு பெரும் நாடுகளாகவும், மாபெரும் சந்தையாகவும் திகழும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உரசலானது வெறும் எல்லைத் தகராறு மட்டும் இல்லை, அது வர்த்தகத்திலும், உலகப் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும்.  தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழலை உலகமே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், கொரோனா பரவல் விவகாரத்தில் உலகமே சீனாவின் மீது மனத்தாங்கல் கொண்டு, சர்வதேச விசாரணையை கோரும் நிலையில் உள்ளது.  இதன் பலன்கள் இந்தியாவிற்கு சாதகமாக அமையலாம். 


எதுஎப்படியிருந்தாலும் சரி.  இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுப் பாலத்தை அமைத்தவர்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்தியப் பிரதமருமான ராஜீவ் காந்திக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.  இந்தியா உருவான போது, சீனாவுடன் நட்பு கொண்ட நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முன்முயற்சியானது இடையில் சுணங்கிப் போனாலும், மீண்டும் நட்பை தழைக்கச் செய்தவர் அவரது பேரனான ராஜீவ் காந்தி என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.