ஆட்சியை இழந்ததில் இருந்து அதிமுக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. தோல்விக்குக் காரணம் கட்சிக்குள் நடக்கும் பூசல்கள் என வெளிப்படையாகவே விமர்சனங்கள் வந்தன. மீண்டும் சசிகலாவை கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பகிரங்கமாக பேட்டிக் கொடுத்தனர். தேனி உள்ளிட்ட பல இடங்களில் அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனாலும், தொடர்ந்து இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகியோர் சசிகலாவைக் கட்சிக்குள் சேர்க்க மறுத்துவந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஒரு ஊருல ஒரு மடாலயம்... ஜெயலலிதா பாணியில் ஈபிஎஸ்க்கு குட்டிக்கதை சொன்ன சசிகலா


இந்நிலையில், தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. அதிமுகவில் இ.பி.எஸ் அணி தனியாகவும், ஓ.பி.எஸ் அணி தனியாகவும் இயங்கி வருவதாக கட்சித் தொண்டர்கள் புகார் அளித்து வருகின்றனர். இதையடுத்து, இருவரில் யார் கட்சியை வழிநடத்துவது என்ற விவாதம் இருந்து வந்த நிலையில், இ.பி.எஸ், ஓ.பி.எஸ்  ஆகியோருக்கு எதிராக அவரவர் ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் புயலைக் கிளப்பியதை அடுத்து சென்னை வானகரத்தில் வரும் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதனிடையே, அதிமுகவன் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம்  ஆவிலிபட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்த மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்,  2017ம் ஆண்டு கட்சியின் விதிகளுக்கு முரணாக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். 


இந்தப் பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்த ஆவணத்தையோ, கடிதத்தையோ தேர்தல் ஆணையம் அதிமுகவுக்குத் தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை எனவும்,  அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்று எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனவும் மனுதாரர் கூறியுள்ளார்.


எனவே, விதிமுறைகளுக்க முரணாக ஜூன் 23ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறுவதாகவும், இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் சூரியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு சென்னை நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கோரி அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக  மனுத்தாக்கல் செய்தனர். 


மேலும் படிக்க | ஒற்றை தலைமை... அஸ்திரத்தை கையிலெடுத்த ஓபிஎஸ் - அதிமுகவுக்குள் அடுத்த பூகம்பம்?


அந்த மனுவில், மனுதாரர் சூரியமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாததால் உட்கட்சி விவகாரத்தில் தலையிட அவருக்கு உரிமையில்லை என்றும், எனவே பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மனுதாரர் தரப்பில், பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளதால் வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி பிரியா, அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நிராகரிப்பு மனுவுக்கு பதிலளிக்கும்படி,  சூரியமூர்த்திக்கு  உத்தரவிட்டார். இதன் விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார். இதனால், வரும் 23ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்த அதிமுகவுக்கு எந்த ஒரு தடையும் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR