திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!
திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..!
திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..!
கொரோனா பரவல் (Coronavirus) காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டனர். அத்துடன் ஏராளமான திரையரங்க ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். அதன்பின்னர், மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதியளித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு அன்றைய தினம் தமிழகத்தில் (Tamil Nadu) திரையரங்குகளை இயக்க அனுமதியளிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து திரையரங்குகளை திறக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை பலமுறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு (TN Govt) அனுமதியளித்தது. இதற்கிடையே பொங்கல் ரிலீசை முன்னிட்டு 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டுமென திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து நடிகர் விஜய் (Actor Vijay) முதல்வர் பழனிசாமியை சந்தித்து, பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர் (Master) படம் வெளிவர இருப்பதால் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதேபோல் இன்று நடிகர் சிம்பு தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி கோரி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. மேலும் கொரோனா விதிமுறைகள் அனைத்தும் கட்டயாமாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு (TN GOVT) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | தளபதி விஜயின் Master தியேட்டர் கலாச்சாரத்தை மீட்டெடுக்குமா? தனுஷ்
இது குறித்து நடிகர் சிம்பு (Silambarasan) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., “இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும். "ஈஸ்வரன்" பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது.
ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம். அதற்காகத்தான் இந்தக் கொரோனா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல. இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும், மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு செய்யும் மரியாதை.
அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.
திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள். என் ரசிகர்கள், மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்குகள் நிறையட்டும். கொரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும்.
ALSO READ | சூர்யா வா இது? இணையத்தில் வைரலாகும் மாஸ் ஓ மாஸ் புகைப்படம்!
அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும். விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும். திரையுலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன். அரசாங்கம் கடைகள், மால்கள், கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன. திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டாலொழிய அந்த பழைய நிலை வராது.
வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் சதவீத இருக்கை ஆக்ரமிப்பு குறித்து உத்தரவிட்டால் மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என சிம்பு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR