கூட்டணியில் சரிபாதி சீட் வேண்டும் - அண்ணாமலை போடும் கணக்குக்கு அதிமுக செவி சாய்க்குமா?
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாஜக சரிபாதி சீட் கேட்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அண்மையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், அண்ணாமலையுடன் சென்று நேரில் அமித்ஷாவை சந்தித்தனர். அப்போது, அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதை உறுதி செய்த அமித்ஷா வலுவான கூட்டணியை திமுகவுக்கு எதிராக அமைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தியுள்ளார். அதேநேரத்தில், கடந்தமுறை நடந்தவாறு சீட் பேரத்தில் இழுத்தடிக்ககூடாது, அதிக சீட்டுகளை பாஜகவுக்கு கொடுக்க வேண்டும் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளாராம்.
பாஜக தரப்பில் குஷி
இது குறித்து அண்ணாமலை வட்டாரத்தில் பேசும்போது, பாஜக - அதிமுக கூட்டணி உறுதி என்றாலும், நாங்கள் எதிர்பார்க்கும் சீட்டை கட்டாயம் கேட்டுப் பெறுவோம். அவர்கள் கொடுக்க நினைக்கும் சீட் கணக்கெல்லாம் எங்களுக்கு ஒத்துவராது. எங்களுக்கு வேண்டிய சீட் எண்ணிக்கையையும், தொகுதிகளையும் இந்த முறை விட்டு தருவதாக இல்லை. கடந்த முறை சீட் பேரம் கடைசி வரை சென்றது. இந்த முறை நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதிக தொகுதிகளை கொடுக்க வேண்டும் என தேசிய தலைமையும் அதிமுகவிடம் தெரிவித்துவிட்டது. இதனால், குறைந்தது 20 சீட்டுகள் அல்லது 15 தொகுதிகளிலாவது பாஜக போட்டியிட வேண்டும் என விரும்புகிறது என தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | ஆருத்ரா மோசடி வழக்கில் பாஜகவினரின் தொடர்பு பற்றி விசாரணை!
அண்ணாமலை உறுதி
அதிமுக கூட்டணி உறுதி என்றாலும் நாங்கள் ஒரு தேசிய கட்சி. எங்களுக்கான சீட்டை கட்டாயம் கேட்டுப்பெறுவோம். நாங்கள் தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் எங்களை ஜூனியர் போல் நடத்துவதை அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கான தொகுதிகளின் பட்டியல் எங்களிடம் இருக்கிறது. அதனை அதிமுக கொடுக்கும். தேசிய தலைமையின் எண்ணத்தையும் அவர்களிடம் தெரிவித்துவிட்டது. அதனால் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. தேர்தல் சமயத்தில் எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதிகள் என்பதை அறிவிப்போம். கடந்த முறையை விட இந்த முறை நிச்சயம் கூடுதல் தொகுதியில் பாஜக போட்டியிடும் என்பது மட்டும் உறுதி என பேசிக் கொண்டிருக்கிறாராம்.
அதிமுகவில் சலசலப்பு
அதிமுகவின் தலைமைப் பொறுப்பை கைப்பற்றி எடப்பாடிக்கு, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது. இதுவரை அவரது தலைமையில் அதிமுக சந்தித்த தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டவில்லை என்பதால், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தனது செல்வாக்கை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார். அதற்காக இப்போதே நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட அவர், எப்படியாவது குறிப்பிட்ட வெற்றியை அதிமுக பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
கூட்டணி தலைவலி
இப்போதைக்கு அவருக்கு பெரும் தலைவலியாக இருப்பது பாஜக கேட்கும் தொகுதிகளையும், சீட்டுகளையும் எப்படி கொடுப்பது என்பது தான். அதிமுக கட்சியை கைப்பற்றிய அவர், அதிமுகவுக்கு பாதகமில்லாமல் பாஜகவுடனான சுமூக உறவை பேண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எந்த பக்கம் சறுக்கினாலும் அது தலைவலியாக போய் முடியும் என்பதை அறிந்து வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, இதனை சரிகெட்ட என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம். குறிப்பாக கொங்கு பகுதியில் அதிமுக வலிமையாக இருக்கும் இடத்தில் பாஜக சீட் கேட்டால் அதனை எப்படி டீல் செய்யலாம் என்பதை கட்சி மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறாராம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ