சென்னை: இன்று தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள். தமிழகம் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் ஒரு ஆதர்ஷ அரசியல்வாதியாக, பலருக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி என்று கூறினால் அது மிகையாகாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று கலைஞரின் 98-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. கொரோனா (Coronavirus) காலம் என்பதால், தொற்று பரவலை கருத்தில்கொண்டு பெரிய அளவில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளார். கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல மக்கள் நல திட்டங்களை இன்று முதல்வர் துவக்கிவைக்க உள்ளார். 


கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையையான 2000 ரூபாய் கொடுக்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) இன்று துவக்கி வைக்கிறார். மேலும், கொரோனா ஊரடங்குக்காக மக்களுக்கு 14 வகை மளிகைப்பொருட்களை வழங்கும் திட்டத்தையும் இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கான நிவாரண நிதி, அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரணம் வழங்கும் திட்டம் ஆகியவையும் இன்று தொடங்கும்.


கொரோனா நிவாரண நிதி - இரண்டாவது தவணை


இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தீயாய் பரவிக்கொண்டிருந்த நிலையில், தற்போது படிப்படியாக தொற்றின் அளவு குறைந்துகொண்டு வருகிறது. தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு நாளுக்கு நாள் குறைந்துகொண்டு இருக்கிறது. 
தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தளர்வுகளற்ற ஊரடங்கு தற்போது தமிழகத்தில் அமலில் உள்ளது. முன்னதாக, மே மாதம் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அமலில் இருந்த முழு ஊரடங்கு, ஜூன் 7 வரை நீட்டிக்கட்டுள்ளது.


நீண்ட நாட்களாக தொடரும் முழு ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை ஓரளவு சரி செய்ய, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு (Ration Card Holders) கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன் படி, இந்த நிவாரண நிதியின் முதல் தவணையாக, இரண்டாயிரம் ரூபாய், 2 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இந்த நிவாரண நிதியின் முதல் தவணையை பெறாதவர்கள் அதை இந்த மாதமும் பெற்றுக்கொள்ளலாம் என அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை தொடக்கி வைப்பார். 


ALSO READ: கொரோனா ஊரடங்கு உள்ளவரை மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி


14 வகை மளிகைப் பொருட்களின் தொகுப்பு


இது தவிர, கொரோனா பாதிப்பு நிவாரணமாக 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கும் திட்டத்தையும் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைக்கிறார். இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கவிருக்கும் விழாவில் தமிழக முதல்வர் இந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். 


அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரணம்


தமிழக அரசு அறநிலையத்துறையின் கீழ் ஒரு கால பூஜையுடன் இயங்கிக்கொண்டிருக்கும் 12,959 கோவில்களில் மாதச்சம்பளம் இன்றி பணிபுரியும் 14,000-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் இன்று தொடங்கிவைக்கப்படும். 


முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் 


மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், நீதிபதிகள் ஆகியோரது குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாயும், பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் ரூபாயும் வழங்கும் திட்டங்களையும் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் 10 பயனாளிகளுக்கான அரசு பயன்களையும் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். 


ALSO READ: Chennai COVID: 20% சென்னைவாசிகள் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR