கனியாமூர் வழக்கில் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் விசாரணை
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு: விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகள் நேரில் ஆஜர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் +2ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜீலை மாதம் 13ஆம் தேதி, பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்ட நிலையில் மாணவி ஸ்ரீமதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு கனியாமூர் தனியார் பள்ளி முன்பு கடந்த ஜீலை மாதம் 17ம் தேதி நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. அப்போது தனியார் பள்ளி அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டத்தோடு, தீ வைத்தும் கொளுத்தப்பட்டது. தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பாஜக பிரமுகர்!
இந்நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகிய 3 பேர் மதுரையிலும், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா ஆகிய 2 பேர் சேலத்திலும் தங்கி இருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் காலை, மாலை என இருவேளைகளிலும் ஒரு மாதத்திற்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி இருந்தது.
அதன்பிறகு விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தினந்தோறும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என ஜாமின் நிபந்தனைகளை சிறிது தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த சில தினங்களாக தினந்தோறும் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்த பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகள், ஜாமின் நிபந்தனையை மேலும் தளர்த்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை மீண்டும் அணுகினர்.
மேலும் படிக்க | மாநில அரசு சேனலுக்கு தடை - எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்... மநீம கோரிக்கை
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேரும் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஒரு நாள் மட்டும் காலை 10.30 மணிக்கு விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டு ஜாமின் நிபந்தனைகளை மேலும் தளர்த்தியது.
அதன்படி, சனிக்கிழமை தினமான இன்று கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேரும் விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.
அப்போது பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளிடம் மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் திருமதி.கோமதி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | செல்பி மோகத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் பறிபோகும் உயிர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ