`தேர்தல் நேரம்... CAA மூலம் கரையேற பார்க்கிறார் பிரதமர்` - ஸ்டாலின் கடும் சாடல்!
CM Stalin Condemns CAA Implementation: குடியுரிமை திருத்தச் சட்டம் நான்கு ஆண்டுகளுக்கு பின் இன்று அமல்படுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டங்களை தெரிவித்துள்ளார்.
CM Stalin Condemns CAA Implementation: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இன்று அமலுக்கு கொண்டுவந்தது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசிதழில் உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது.
2019ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலின் போது குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த தேர்தல் வாக்குறுதியை பாஜக அளித்தது. அதன் தொடர்ச்சியாக இச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு அதிமுக உள்ளிட்ட அப்போதைய கூட்டணி கட்சிகளின் உதவியால் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு மார்ச் வரை நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்றன. அதன்பின் கொரோனா ஊரடங்கு ஏற்படவே, போரட்டங்கள் நின்றன. இருப்பினும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பாஜக ஆளாத மாநிலங்களின் முதலவர்கள் உள்ளிட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தனர்.
மேலும் படிக்க | அமலானது சிஏஏ சட்டம்... அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு - முழு விவரம்
அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஒருவர் எனலாம். 2019இல் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவராகவும், திமுக தலைவராகவும் இருந்த அவர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஒன்று திரட்டி போராட்டங்களை நடத்தி, மக்கள் மத்தியில் எதிர்ப்பை பதிவு செய்தார். தொடர்ந்து, 2021இல் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வந்த பின்னர், சிஏஏ சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'அதிமுகவால் நிறைவேறிய சிஏஏ'
தற்போது சிஏஏ அமலுக்கு வந்ததை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X பக்கத்தில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதில் அவர், "குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பாஜக அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றியது ஒன்றிய பாஜக அரசு.
அதனை திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பாஜகவின் பாதம் தாங்கியான அதிமுக ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பாஜக.
திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019ஐ, ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
'அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்'
இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.
அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பாஜகவையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
பினராயி விஜயன், மம்தா பானர்ஜி எதிர்ப்பு
முன்னதாக, பாஜகவின் இந்த சிஏஏ அமலாக்கம் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பினராயி விஜயன் அவரது X பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்தில் சிஏஏ அமலாவது குறித்து மம்தா பானர்ஜி பேசியபோது,"மக்களை பாரபட்சத்துடன் அணுகும்படியிருக்கும் எதையும் ஏற்க மாட்டோம். அது மத ரீதியான பாரபட்சமோ, ஜாதி ரீதியான பாரபட்சமோ, மொழியோ ரீதியான பாரரபட்சமோ எதுவாக இருந்தாலும் ஏற்க மாட்டோம். இரண்டு நாட்களில் யாருக்கும் குடியுரிமை கொடுக்க முடியாது. இது வெறும் பாஜக கொடுக்கும் லாலிபாப் மற்றும் விளம்பரம்.
நான்கு ஆண்டுகளில் பிறகு, மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு சிஏஏவை செயல்படுத்துவது அரசியல் காரணங்களுக்காக செய்யப்படுகிறது என்பதைக் காட்டுகிறது" என்றார்.
மேலும் படிக்க | பிரதமர் போட்ட பதிவு... கலாய்த்த சுப்பிரமணிய சுவாமி! - அரசியல் களத்தில் பரபரப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ