மக்களவை தேர்தல் வெற்றியில் சந்தேகம்... தோல்வியடைந்த 3 பேர் மனு தாக்கல்!
Tamil Nadu Latest News: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற மூன்று உறுப்பினர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்கின்றனர்.
Tamil Nadu Politics Latest News: 18ஆவது மக்களவை தேர்தல் கடந்த ஏப், மே மாதங்களில் மொத்தம் கட்டங்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் கடந்த ஏப். 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி அன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகளும் அன்றே வெளியிடப்பட்டன.
மத்தியில் எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை. 272 இடங்களை கைப்பற்றினால் மெஜாரட்டியை பெறலாம் என்ற நிலையில், பாஜக மட்டும் அதிகபட்சமாக 240 தொகுதிகளை கைவசம் வைத்திருந்தது. இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகளின் ஆதரவுடன் மொத்தம் 292 இடங்களுடன் பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்தது.
நாற்பதற்கு நாற்பது
காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றிருந்த இந்தியா கூட்டணி மொத்தம் 230க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. 99 இடங்களுடன் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியானது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த திமுக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றியது.
இம்முறை திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்த்து, அதிமுக - தேமுதிக - எஸ்டிபிஐ - புதிய தமிழகம் ஆகியவை ஒரு கூட்டணியாகவும், பாஜக - பாமக - அமமுக - தாமகா - இந்திய ஜனநாயக கட்சி - இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை தனி கூட்டணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் இந்த தேர்தலை சந்தித்தன.
நட்சத்திர வேட்பாளர்களும் தோல்வி...
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் இந்த வெற்றி, தேசிய அளவில் இந்திய கூட்டணிக்கு பெரும் பலத்தை அளித்தது. திமுகவை எதிர்த்து அதிமுக கூட்டணியிலும், பாஜக கூட்டணியிலும் பல்வேறு நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கியும் தோல்வியைதான் சந்தித்தனர். அதில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிகவின் சார்பாக மறைந்த விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் போட்டியிட்டார். அதே போல், பாஜக சார்பிலும் அண்ணாமலை, தமிழிசை சௌந்திரராஜன், எல். முருகன், ராதிகா சரத்குமார், நயினார் நாகேந்திரன் என பல நட்சத்திர வேட்பாளர்கள் களம் கண்டனர்.
மேலும் படிக்க | வாக்கிங் போனீங்கன்னா இடைத்தேர்தல் வந்துரும்: செல்லூர் ராஜூ
விஜய பிரபாகரனின் குற்றச்சாட்டு
இதில், விருதுநகர் தொகுதியில் மட்டும் மாணிக்கம் தாக்கூர் - விஜய பிரபாகரன் - ராதிகா சரத்குமார் என மூன்று பிரபலங்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கையும் தாமதமாக நடைபெற்றது. மாணிக்கம் தாகூர் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விஜய பிரபாகரன் இரண்டாம் இடம் பிடித்தார். இதன்மூலம், வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பதாகவும், மாவட்ட தேர்தல் அலுவலரே தனக்கு அழுத்தம் இருப்பதாக கூறியதாகவும் விஜய பிரபாகரன் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனால், டெல்லி சென்று அங்கு தேர்தல் ஆணையத்திடம் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும், தேர்தல் ஆணையம் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தது. இதை தொடர்ந்து அவர் உயர் நீதிமன்றம் செல்வார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது விஜய பிரபாகரன் மட்டுமின்றி பாஜக சார்பில் போட்டியிட்ட ஓ. பன்னீர் செல்வம், நயினார் நாகேந்திரன் ஆகியோரும் அவர்கள் போட்டியிட்ட தொகுதியின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக தேர்தல் மனுவை தாக்கல் செய்தனர்.
3 பேர் மனு தாக்கல்
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியை சேர்ந்த நவாஸ் கனியை எதிர்த்து பாஜக கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூரை எதிர்த்து தேமுதிகவின் விஜய பிராபகரன், திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் ராபர்ட் புரூஸை எதிர்த்து நயினார் நாகேந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்கின்றனர்.
அதாவது, இந்த மூவரின் வெற்றியின் மீதும், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் மீதும் சந்தேகம் இருப்பதாக கூறி அவர்களை எதிர்த்து போட்டியிட்ட இந்த மூவரும் வழக்கு தாக்கல் செய்கின்றனர். இதில் விஜய பிரபாகரன் தரப்பில்,"தபால் வாக்குகளைத்தான் முதலில் எண்ணுவார்கள். ஆனால் விருதுநகர் தொகுதியில் மட்டும் நள்ளிரவில் எண்ணப்பட்டது. உணவு இடைவேளையானது ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்தது. உணவு இடைவேளையின் போது 13ஆவது சுற்று இருந்தது. ஆனால் உணவு இடைவேளைக்கு பிறகு 18 ஆவது சுற்றை அறிவிக்கிறார்கள். அப்படியென்றால் 13க்கு பிறகான சுற்றுகளை எப்போது எண்ணினார்கள்" என கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் படிக்க | ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ