PMK on Reservation: வன்னியர் தனி இட ஒதுக்கீடு, கிராம அளவிலான போராட்டத்திற்கு அழைப்பு
வன்னியர் தனி இட ஒதுக்கீடு: கிராம அளவிலான போராட்டத்திற்கு தயாராவீர்! அனைத்து தரப்பு ஆதரவை திரட்டுவீர்!! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு மடல்
புதுடெல்லி: இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் கிராம நிலையில் போராட்டங்கள் நடத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு:
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சமூகநிலையில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய சமுதாயம் முன்னேற வேண்டுமானால், அதற்கு அடிப்படைத் தேவை 20% தனி இட ஒதுக்கீடு ஆகும். அதனால் தான் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 40 ஆண்டுகளாக நாம் போராடி வருகிறோம். ஆனாலும் 20% தனி இட ஒதுக்கீடு என்ற நமது நியாயமான கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை.
அந்தக் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக திசம்பர் ஒன்றாம் தேதி முதல் பல கட்டங்களாக தொடர் போராட்டங்களை நடத்துவதென்று வன்னியர் சங்கம் - பாட்டாளி மக்கள் கட்சி (pmk) கூட்டுப் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அறவழிப் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்; வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் சென்னை மன்றோ சிலை அருகில் நடைபெற்ற அறப்போராட்டம் அமோக வெற்றி பெற்றிருக்கிறது; அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாட்டாளிகள் சென்னைக்கு திரண்டு வந்தீர்கள். ஆனால், சென்னையில் 78 இடங்களிலும், சென்னைக்கு வெளியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களிலும் பாட்டாளி சொந்தங்களை கைது செய்தும், தடுத்து நிறுத்தியும் போராட்டக் களத்திற்கு சென்று விடாமல் தடுத்துள்ளனர். அதையும் மீறித் தான் பல்லாயிரக்கணக்கான பாட்டாளி சொந்தங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டீர்கள். அதன்பிறகு நடைபெற்று வரும் போராட்டங்களும் வெற்றி பெற்றுள்ளன. இதை சாதித்த அனைத்து நிலை நிர்வாகிகள், தம்பிகள், தங்கைகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Read Also | PMK வன்னியர் இட ஒதுக்கீடு: டிசம்பர் 1 முதல் TNPSC முன் பெருந்திரள் போராட்டம்!
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரும் நமது போராட்டம் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் பெற்றுள்ளது. பல்வேறு சமுதாய சங்கங்களும், பிற அமைப்புகளும் நமது கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு நமக்கு ஆதரவு அளித்துள்ளனர். பிற சமுதாயங்களும், சமூகநீதி அமைப்புகளும் வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டு போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன்.
சென்னையில் இம்மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போராட்டங்களைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக தமிழ்நாடு (Tamil Nadu) முழுவதும் உள்ள 16,743 வருவாய் கிராமங்களை நிர்வகிக்கும் 12,621 கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன்பாகவும் வரும் திசம்பர் 14-ஆம் தேதி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறவிருக்கிறது. கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்புகள். எனவே, கிராமங்களில் நடத்தப்படவிருக்கும் இந்தப் போராட்டங்களைத் தான் மிகச்சிறந்த போராட்ட வடிவமாக நான் பார்க்கிறேன்.
கிராமப்புறங்களில் நடைபெறவிருக்கும் இந்தப் போராட்டம் தான் நமது கோரிக்கைகளையும், அவற்றில் உள்ள நியாயங்களையும் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கொண்டு சென்று சேர்க்கும்.... சேர்க்க வேண்டும்... சேரும் என்று நம்புகிறேன். கிராமங்களில் நடைபெறவுள்ள மக்கள்திரள் போராட்டங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட வேண்டும். அது தான் நமது கோரிக்கைகளுக்கு கூடுதல் வலிமை சேர்க்கும். அதற்கான பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், அன்புமணியின் தம்பிகள், தங்கைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட அனைவரும் இப்போதே தொடங்க வேண்டும்.
Also Read | நமது வெற்றியை நாளை போராட்டம் சொல்லும்: PMK
பாட்டாளி மக்கள் கட்சி - வன்னியர் சங்க கூட்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் அறவழிப் போராட்டங்களை நடத்துவதற்காக கிராம அளவில் போராட்டக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி அன்புமணியின் தம்பிகள் படை, தங்கைகள் படை, இளைஞர்கள், இளம்பெண்கள், வாக்குரிமை பெறாத சிறார்கள், சகோதர சமுதாயத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கொண்டு போராட்டக் குழுக்களை அமைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு அமைக்கப்பட்ட போராட்டக் குழுவினர் ஒவ்வொரு நாளும் கூடி, போராட்டத்தை சிறப்பாக நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.
வன்னியர்கள் (vanniyar) 20% தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டம் ஏன்? என்பது குறித்த துண்டறிக்கையும், நான் எழுதிய ‘‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ நூலில் 51-ஆவது அத்தியாயமாக இடம்பெற்றிருந்த ‘‘வன்னியர்களே சிந்திப்பீர்?’’ என்ற தலைப்பிலான துண்டறிக்கையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை நிர்வாகிகள் மூலம் போராட்டக்குழுவினரை வந்தடையும். அவற்றை வீடு, வீடாக சென்று அனைத்துத் தரப்பு மக்களிடமும் வழங்கி, அவர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். இந்தப் பணியை உடனடியாகத் தொடங்கி போராட்ட நாள் வரை தொடர வேண்டும் என பாட்டாளி சொந்தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும், மீண்டும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் மிகவும் பின்தங்கிய இருக்கும் சமுதாயம் வன்னியர்கள் தான். அவர்கள் படித்து, பணிக்கு சென்று வாழ்க்கையில் நிலையான இடத்தை அடைந்தால் தான் அவர்கள் குடும்பம் முன்னேறும்; அந்த சமுதாயம் முன்னேறும்; வன்னியர் சமுதாயம் முன்னேறினால் தான் தமிழ்நாடு (TamilNadu) முன்னேறும். எனவே வன்னியர்களின் வாழ்வுரிமைக்காக 20% தனி இட ஒதுக்கீட்டை பெற்றே தீர வேண்டியது மிகவும் அவசியமாகும். இதை சாதிக்க வேண்டியதை நமது புனிதக் கடமையாகக் கருதுகிறேன். இந்தக் கடமையில் பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்; சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த மக்களையும் ஈடுபடுத்த வேண்டும். அதன் மூலம் தான் நமது கோரிக்கையை சாதிக்க முடியும்.
Also Read | Ramadoss on Reservation: சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி
எனவே, பாட்டாளிகளே சமூகத்திற்காக ஒன்றுபடுங்கள்.... சமூக நீதியை விரைவாக வென்றெடுப்போம்.” என்று பா.ம.க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR