பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்குக் காரணமான அதிமுகவினர் உட்பட, சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளி கூடத் தப்பித்து விடாதபடி விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்குக் (Pollachi sexual assault) காரணமான அதிமுகவினர் உள்ளிட்ட ஒரு குற்றவாளியும் தப்பித்துவிடாமல் உடனே தண்டிக்கப்படவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK.Stalin) கோரிக்கை விடுத்துள்ளார். 


இது குறித்து கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது., "பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தைச் சீரழித்துள்ளது முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான AIADMK அரசு. அதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான், பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்குத் தொடர்ச்சியாக நடந்த பாலியல் கொடூரங்கள்.


“அண்ணா அடிக்காதீங்கண்ணா..” என்று கதறிய அந்தக் குரல் இன்னமும் நம் காதுகளில் ஒலித்து, இதயத்தைக் கிழிக்கிறது. பத்திரிகை-தொலைக்காட்சி-சமூக வலைத்தளம் என அனைத்திலும் வெளியான அந்தக் கொடூர நிகழ்வு குறித்த செய்திகள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே உலுக்கின. இந்தப் பாலியல் கொடுமைகளின் பின்னணியில் அ.தி.மு.கவினர் இருக்கிறார்கள் என்பதைத் தொடக்கத்திலிருந்தே DMK உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், மகளிர் அமைப்பினரும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து வலியுறுத்திப் போராடி வந்தனர். அவர்களைக் கைது செய்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது AIADMK அரசு.


ALSO READ | 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி: ராதாகிருஷ்ணன்!


இடைவிடாத போராட்டத்தின் காரணமாக, திருநாவுக்கரசு என்பவரைக் கைது செய்து, அவரை மட்டும் பலிகடாவாக்கி, ஆளுந்தரப்பினரைக் காப்பாற்றுவதற்கு எல்லா வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், உண்மைகளை மறைக்க முடியவில்லை. அமைச்சர்கள் உள்ளிட்ட AIADMK பிரமுகர்களின் குடும்பத்தினருடன் தொடர்புடைய, ஆளுங்கட்சியில் பொறுப்பில் உள்ள ‘பார்‘ நாகராஜன் போன்ற AIADMK நிர்வாகிகளுக்கு, இந்தக் கொடூர பாலியல் விவகாரத்தில் தொடர்பிருப்பது அம்பலமானது. கைது செய்யப்பட்ட பார் நாகராஜனைக் காப்பாற்ற அமைச்சர் தொடங்கி காவல்துறை (TN Police) வரை காட்டிய அக்கறையும், அரசுத் தரப்பில் எவ்வித எதிர்ப்புமின்றி எளிதாக ஜாமீன் கிடைக்கச் செய்ததும், வெளியே வந்த பார் நாகராஜனை உடனடியாக மாவட்ட ஆட்சியர் சந்தித்ததும், அவரது அலுவலக வளாகத்திலேயே நின்று ஆளுங்கட்சி நிர்வாகியான நாகராஜன் பேட்டி அளித்ததும், எடப்பாடியின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே அப்பட்டமாகக் காட்டியது.


முழுக்க முழுக்க அ.தி.மு.க மேலிடத்தின் ஆதரவுடன், AIADMK-கவில் தொடர்புடையவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்தப் பாலியல் கொடூரத்தை மூடிமறைக்கவும், எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டித் திசை திருப்பவும், செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்-நிருபர்களையே குற்றவாளிகள் போல விசாரணைக்கு உட்படுத்தி AIADMK அரசும் அதன் ஏவல் துறையான காவல்துறையும் செயல்பட்டதை DMK தொடர்ந்து எதிர்த்து, வலுவான குரல் கொடுத்தும், போராடியும் வந்தது. 


இந்நிலையில், இந்த வழக்கு CBI-க்கு மாற்றப்பட்டது. அதன் பிறகும் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லாதது கவலை அளித்தது. தாய்மார்களும், பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தாரும் பாதுகாப்பில்லாத சூழலை நினைத்து அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டதோ பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு என நினைத்த நிலையில், பாபு, ஹெரோன் பால், அருளானந்தம் ஆகிய மூவரை CBI இன்று கைது செய்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 


ALSO READ | தைப்பூசத்தையொட்டி ஜனவரி 28 ஆம் தேதி பொது விடுமுறை: TN Govt


இளம்பெண்களை நம்ப வைத்து, அதன்பிறகு ஏமாற்றி, பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, பெல்ட்டால் அடித்து சித்ரவதை செய்து, சீரழித்த கொடூரன்களில் மூவர் சிக்கியிருக்கிறார்கள். இதில் பாபுவும், ஹெரோன் பாலும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்கள். குற்றப் பின்னணியின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டவர்கள். தொடர்ச்சியான புலன் விசாரணையின் அடிப்படையில், மூன்றாவதாகக் கைதாகியுள்ள அருளானந்தம் என்பவர் பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளர். அ.தி.மு.கவின் பொள்ளாச்சி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமாரின் நிழல் போலச் செயல்படுபவர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் நன்கு அறிமுகமாகி, அவரால் வளர்க்கப்பட்டவர். தோண்டத் தோண்ட இன்னும் நிறையத் தொடர்புகள் விசாரணையில் கிடைக்கும். 


சிக்க வேண்டிய ஆளுங்கட்சி பிரமுகர்கள் இன்னும் பலர் உள்ள நிலையில், தற்போது பிடிபட்டவர்களுக்கு, பார் நாகராஜன் போல உடனடி ஜாமீன் கிடைப்பதற்கு வழி வகுத்துவிடக்கூடாது என வலியுறுத்துகிறேன். பொல்லாத அ.தி.மு.க ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி கொடூரம் என்பது ஆறேழு ஆண்டுகளாகவே இப்பகுதியில் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், அதில் ஆளுங்கட்சியினரின் குடும்பத்து இளைஞர்களும், ஆளுங்கட்சியோடு பல வகையிலும் நெருக்கமானவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
சி.பி.ஐ. விரைந்து விசாரணை நடத்தி, கொடூர பாலியல் குற்றத்தில், அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி, ஒரு குற்றவாளிகூட தப்பிக்காதபடி தண்டிக்கப்பட்டு, தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR