இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“ திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் பெரியகுடியிலுள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றிலிருந்து எரிகாற்று எடுப்பதற்கான கலந்தாலோசனை கூட்டம் விரைவில் நடைபெறுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான’ காவிரிப்படுகை பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எரிகாற்று எடுக்க முயலும் திமுக அரசின் திரைமறைவுச் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியது. காவிரிப்படுகை மாவட்டங்களை முற்றுமுழுதாகப் பாலைவனமாக்கி, விவசாயிகளை வேளாண்மையை விட்டே அகற்றும் நோக்கத்துடன் கடந்த 2010ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசால் அனுமதியளிக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட மீத்தேன் எரிகாற்று எடுக்கும் கொடுந்திட்டம், ஐயா நம்மாழ்வார் உள்ளிட்ட பெருமக்களின் தொடர்ப்போராட்டத்தால் கைவிடப்பட்டது. பின்னர் அதே திட்டம் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் முந்தைய அதிமுக அரசால் செயல்படுத்த முனைந்தபோது விவசாயிகள் விழிப்படைந்து வீரியமான போராட்டங்களை முன்னெடுத்ததால் மீண்டும் கைவிடப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், நாம் தமிழர் கட்சி மற்றும் விவசாயச் சங்கங்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாகவும், வேளாண் பெருங்குடி மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்றும் கடந்த 2020ஆம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரிப் படுகை மாவட்டங்களைப் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. இதனால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் எரிகாற்று உள்ளிட்ட நாசகார திட்டங்களால் பாதிக்கப்படவிருந்த லட்சக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் பேரழிவிலிருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு... கொள்ளையனாக மாறிய நபர்


காவிரிப்படுகை மட்டுமின்றித் தமிழ்நாடு முழுவதும் விளைநிலங்களைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிகாற்றுகள் எடுக்கத் தடைவிதிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துவந்த நிலையில், மீண்டும் ஹைட்ரோ கார்பன் எரிகாற்று எடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்திற்குக் கடந்த மாதம் 29ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியரால் அழைப்பு விடுக்கப்பட்டு, கடும் எதிர்ப்பு எழுந்தவுடன் கூட்டம் பின்னர் நடைபெறும் என்று மறு அறிவிப்பு செய்துள்ளது விவசாயப் பெருமக்களிடம் பெருத்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வேளாண் நிலங்களைப் பாழ்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டு, மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை, திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ‘பசுமை வழிச்சாலை’ என்ற மாற்றுப் பெயரில் மீண்டும் செயல்படுத்த முனைந்ததைப்போல, ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் திமுக அரசு மீண்டும் தொடங்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தொடங்கினால் அது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் எதிரானது மட்டுமின்றி, காவிரிப் படுகை வேளாண் பெருங்குடி மக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமுமாகும்.


மேலும் படிக்க | ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி நீதிபதி கடும் கண்டனம்


எனவே, தமிழ்நாடு அரசு காவிரிப்படுகை மட்டுமின்றி தமிழ்நாட்டில் எந்த இடத்திலும், வேளாண் நிலங்களை அழிக்கும் யாதொரு எரிகாற்று எடுக்கும் திட்டத்திற்கும், எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாதென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், பெருங்குடி ஹைட்ரோ கார்பன் கிணறு தொடர்பாக விவாதிக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியர் விடுத்த அழைப்புக் குறித்து தமிழ்நாடு அரசு மக்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ