நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பு....சட்டப்பேரவையில் ஸ்டாலின் தகவல்
நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதென ஆளுநரின் செயலாளர் தெரிவித்ததாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் பரிந்துரை அடிப்படையில் நீட் தேர்வுக்கு விலக்குக்கோரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏறக்குறைய 4 மாதங்களுக்குப் பின் ஆளுநர் மசோதாவை திரும்ப அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து நீட் விலக்கு மசோதா கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காததைக் கண்டித்து திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தன.
இந்த நிலையில், நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக, ஆளுநர் அலுவலகம் தெரிவித்ததாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஆளுநர் தேநீர் விருந்து... ஆளுங்கட்சி புறக்கணிப்பு - காரணம் என்ன?
இதுதொடர்பாக சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து வரும் நீட் தேர்விலிருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற இந்த மாமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்யுமாறு கோரியதும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதித்து, சில தினங்களுக்குள்ளாகவே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைத்தோம்.
இதுதொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து, மேலும் தாமதமின்றி இந்தச் சட்டமுன்வடிவை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து இந்த சட்டமுன்வடிவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தியதாகக் கூறினார்.
இந்தத் தொடர் முயற்சிகளின் பயனாக, ஒரு வரலாற்று நிகழ்வாக, சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்டமுன்வடிவினை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார் என்ற தகவலை ஆளுநரின் செயலர் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தார் எனக் கூறிய ஸ்டாலின், இந்தச் சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR