நான்காம் நாளாக தொடரும் ஆர்மீனியா-அஜர்பைஜான் போரும், `மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா?` என்ற அச்சமும்...
ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் தொடங்கியுள்ள யுத்தமும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலும் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது....
புதுடெல்லி: உலகம் ஏற்கனவே கொரோனா வைரஸ் மற்றும் கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் அலைகழிந்துக் கொண்டிருக்கும் நிலையில், 'உலகப் போர் தொடங்கிவிட்டதா?' என்ற முக்கியமான கேள்வி பலரால் கேட்கப்படும் நிலை எழுந்துள்ளது. இந்த கேள்விகளால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலும், மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுப் (Line of Actual Control (LAC)) பகுதியில் அதிகரித்து வரும் பதட்டமும் கடந்த சில மாதங்களாக கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தவிர, ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் (Azerbaijan) இடையில் தொடங்கியுள்ள யுத்தம் கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த யுத்தம் பெரிதாகும் வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில் ரஷ்யா இந்த பிரச்சனைக்குள் நுழையப்போகிறது.
தாக்குதல் உத்தரவை வழங்கும் வாய்ப்பு: தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் துருக்கி மீது தாக்குதல் நடத்த உத்தரவிடலாம். முஸ்லீம் நாடான அஜர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கி இருக்கும் நிலையில், ஆர்மீனியாவுக்கு ஆதரவு கொடுக்கிறது ரஷ்யா.
அஜர்பைஜானுக்கு ஆதரவாக போராட துருக்கியும், பாகிஸ்தானும் பயங்கரவாதிகளை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு துருக்கி உத்தரவிட்டால், ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையில் பயங்கரமான யுத்தம் தொடங்கலாம். அந்த யுத்தத்தில் பிற வல்லரசுகளும் இணையும் வாய்ப்புகளும் பிரகாசமாகத் தெரிகின்றன.
அழிவின் காட்சி நெருக்கத்தில்: இரான்-துருக்கியின் எல்லையில் அமைந்திருக்கும் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா (Armenia) ஆகிய இரண்டு சிறிய நாடுகளிடையே கடந்த நான்கு நாட்களாக போர் நடந்து வருகிறது. போர்க்களத்திலிருந்து வந்துள்ள பேரழிவுக் காட்சிகள் கவலைகளை அதிகரிக்கின்றன. அஜர்பைஜான் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை நாடு, ஆர்மீனியாவில் கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
பிரச்சனையின் வேர்: ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான போருக்கு முக்கிய காரணம் நாகோர்னோ-கராபாக் (Nagorno-Karabakh) பகுதி. அஜர்பைஜான் இந்த பிராந்தியத்தின் மலைப் பகுதியை சொந்தம் கொண்டாடுகிறது, ஆனால் அதை ஆர்மீனியா ஆக்கிரமித்துள்ளது. 1994இல் முடிவடைந்த சண்டையின்போது இந்தப் பகுதியை ஆர்மீனியா ஆக்கிரமித்துக் கொண்டது. இந்த பகுதி தொடர்பாக 2016 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் மூண்டது. அதில் 200 பேர் கொல்லப்பட்டனர். இப்போது மீண்டும் இரு நாடுகளும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. இரு நாடுகளும் சோவியத் ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
கவலைக்குரிய விஷயம்: இரு தரப்பினரும் எல்லையில் துருப்புக்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். நான்கு அஜர்பைஜான் ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாக ஆர்மீனியா கூறியுள்ளது. நெருக்கடி நிலவும் இந்த நிலையில், அஜர்பைஜானின் சில பகுதிகளில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முக்கியமான பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் போரில், ரஷ்யா, துருக்கி, பிரான்ஸ், இரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் ஈடுபடும் அபாயமும் இருப்பது சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதனால் தான், இந்த யுத்தம் மூன்றாம் உலகப் போரா என்ற கேள்விகளும், அச்சங்களும் உலகளாவிய அளவில் வியாபித்துள்ளன.
ஏற்கனவே உலக மக்களின் மீது கொரோனா வைரஸ் நடத்தும் யுத்தம் மக்கள் நிலைகுலையச் செய்திருக்கும் நிலையில், ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான யுத்தம் மூன்றாம் உலகப் போராக பரிணமித்தால் உலகம் எந்த நிலைக்கு வீழும் என்பதை கணிப்பது கடினம் என அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்தி | மூக்கை நீட்டி மாட்டிக்கொள்ளும் சீனாவின் latest பிதற்றல்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR