சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து தோன்றிய கொரோனா வைரஸால் உலகமே கதிகலங்கி போயிருக்கிறது. சீனாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை கடந்து தங்கள் நாடுகளுக்கு இந்த வைரஸ் வராது என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பெரிய பணக்கார நாடுகள் நினைத்தன. நாட்டிற்கு வரும் விமானங்களையும் தடை செய்தன. ஆனால் இந்த வைரஸ் இத்தாலி மற்றும் ஐரோப்பாவின் பிற நாடுகள் வழியாக உலகெங்கையும் தனது பிடிக்குள் சிக்கவைத்துவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக நாடுகள் அனைத்தும் இந்த பிடியில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் சீனாவின் அண்டை நாடான தைவான் அமைதியாக, திட்டமிட்டு இந்த விஷயத்தை அக்கப்பூர்வமாக அணுகியதன் பயனாக, அந்நாட்டில் இன்று ஆறு பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருக்கிறது. 


சீனாவிலிருந்து சுமார் 12 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்கா போன்ற பணக்கார நாட்டில் வைரஸ் உயிர்க்கொல்லியாக மாறி தாண்டவமாடும் அதே நேரத்தில், வுஹானில் இருந்து 950 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தைவானின் தலைநகர் தைபேவில் பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்களுக்குப் பரவிய கொரோனா பெருந்தொற்று, அதிக உயிர்பலியையும் ஏற்படுத்தியது.  


READ | சீனாவை விட மகாராஷ்டிராவில் அதிக கொரோனா தொற்று பாதிப்பு.. மொத்தம் 85,975


 


தைவானில், 453 பேருக்கு மட்டுமே நோய் பாதிப்பு, 7 பேர் மட்டுமே இறந்தனர் என்பது அனைவருக்கும் வியப்பளிக்கும் விஷயமாகும். இப்போது எழும் கேள்வி என்னவென்றால், சீனாவின் அண்டை நாடாக இருந்தபோதும், கொரோனா வைரஸ் பாதிப்பையும், பரவலையும் தடுக்க தைவான் என்ன செய்தது என்பதே... இது ஒன்றும் கம்பனின் சாத்திரம் அல்ல, அனைவரும் அறியாத அரிதான கலையும் அல்ல.... மாறாக தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஒரு நாட்டின் தொலைநோக்கு சிந்தனையே இந்த சாதனையின் அடித்தளம். 


டிசம்பர் பிற்பகுதியில், வுஹானைச் சேர்ந்த மருத்துவர் லீ வென்லியாங் முதன்முதலில் கொரோனா வைரஸைப் பற்றி, உலகிற்கு கோடிட்டுக் காட்டினார்.. அதை புறக்கணித்த சீன அரசாங்கம், வதந்திகளை பரப்பியதாக அந்த மருத்துவர் மீது குற்றம் சாட்டியது. அதோடு, தற்செயலாக, லீயின் மரணத்திற்கு கொலைகார கொரோனாவே காரணமானது. ஆனால் லீயின் எச்சரிக்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டது அண்டை நாடான தைவான்.  


சீனாவில் கொரோனா தொற்று உறுதியான பிறகு, டிசம்பர் 31 அன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டது. பிறக்கும் புத்தாண்டு பெரும் சிக்கலை ஏற்படுத்தவிருப்பதை அறியாமல் உலகெங்கிலும் உள்ள மக்களும்  புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தனர்.. ஆனால் தைவான் அரசு, தனது நாட்டைப் பாதுகாக்கத் தயாராகிக் கொண்டிருந்தது.


உடனடியாக சீனாவிலிருந்து வரும் கப்பல்களை தடை செய்தது தைவான்... 3 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், முழுமையான லாக்டவுன் அறிவிக்கப்படவில்லை.  பள்ளி, கல்லூரி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு குறுகிய கால தடை விதிக்கப்பட்டன.


நாட்டின் ஜனாதிபதியாக ஜனவரி மாதத்தில் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட, தைவானின் முதல் பெண் ஜனாதிபதியான சாய் இங்-வென் அரசின் அனைத்து துணிச்சலான முடிவுகளுக்கும் பின்புலம் என்பது குறிப்பிடத்தக்கது. 


READ | கொரோனாவுக்கு பின் திறக்கப்படும் கோயில்கள் பாதுகாப்பானதா?


 


டிசம்பரில் சீனாவில் 27 பேருக்கு கொரோனா ஏற்பட்டபோது, வுஹானில் இருந்து வரும் ஒவ்வொரு நபரையும் ஸ்க்ரீனிங் செய்ய வேண்டும் என தைவான் அரசு அறிவுறுத்தியது. அதோடு, சில நாட்களுக்கு முன்பு வுஹானிலிருந்து திரும்பி வந்தவர்களின்  உடல்நிலையை கண்காணிக்கும் பணியும் தொடங்கப்பட்டது.. ஜனவரி 21 ஆம் தேதி தைவானில் முதல் நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.  அதையடுத்து, ஜனவரி 26 முதல் சீனாவிலிருந்து போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது... சீனாவிலிருந்து திரும்பியவர்கள், தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.


கொரோனாவின் அச்சுறுத்தலால் மக்களுக்கு முகக்கவசங்களின் தேவை அதிகரிக்கும் என்று அரசாங்கம் கணித்தது. எனவே தைவான் அரசாங்கம் முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது.  இதனால் முகக்கவசங்களின் பற்றாக்குறையும் ஏற்படவில்லை, அவை தீர்ந்துவிடும் என்ற அச்சத்தால் யாரும் நடுங்கவுமில்லை. முகக்கவசங்களை வாங்குவதற்காக செல்லும் மக்களால் நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக, ஒற்றை-இரட்டை இலக்க  ஃபார்முலா அமல்படுத்தப்பட்டது. தேசிய சுகாதார காப்பீட்டு அட்டையில் ஒற்றை இலக்க எண் கொண்ட நபர்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முகக்கவசங்களை வாங்கலாம்.  இரட்டை இலக்க எண் கொண்டவர்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கடைகளுக்குச் செல்லலாம் .. ஞாயிற்றுக்கிழமையன்று அனைவருமே முகக்கவசங்களை  வாங்கலாம். 


முகக்கவசங்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சிறைச்சாலையில் பெருமளவில் முகக்கவசங்ள் தயாரிக்கப்பட்டன. சிறைச்சாலையில் முகக்கவசங்களை தயாரிக்கும் திட்டம், இந்தியாவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முடிவு எடுப்பதில் காலதாமதம் ஆனது.


இந்த பெருந்தொற்று உலகில் வேகமாகப் பரவி வருவதை கண்ட தைவான் அரசாங்கம்... ஆல்கஹால் நிறுவனங்களின் உற்பத்தியை 75% அதிகரிக்க உத்தரவிட்டது. மே முதல் தேதியிலிருந்து, சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி பொருட்களின் ஏற்றுமதிக்கும் தைவான் அரசு தடைபோட்டது. பிபிஇ கருவிகளுக்காக, பிற நாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டாம் என்பதற்காக, அதிக எண்ணிக்கையில் அவற்றை தயாரிக்கும்படி ஜூன் மாதத்தில் நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்தது தைவான் அரசு.    


தைவான் முழுமையான லாக்டவுனை அறிவிக்கவில்லை .. ஆனால், பொது போக்குவரத்தில் பயணிக்க முகமூடி அணிய வேண்டியது அவசியம். முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு 15 ஆயிரம் தைவான் டாலர்கள், அதாவது 38 ஆயிரம் ரூபாய்   அபராதம் விதிக்கப்பட்டது.  


இந்த தொலைநோக்கு கண்ணோட்டத்தால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் விளைவால், சீனாவின் அண்டை நாடாக இருந்தபோதும், தைவானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450ஐ தாண்டவில்லை ...


புள்ளிவிவரங்களை பார்த்தால், ஜனவரி மாதம் தைவானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்தது. பிப்ரவரியில் இது 39 ஆக உயர்ந்தது .. மார்ச் மாதத்தில் வேகமாக பரவிய பின்னர், இந்த எண்ணிக்கை 322 ஐ எட்டியது .. ஆனால் அதற்குள் அரசாங்கத்தின் முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கின .. ஏப்ரல் மாதத்தில் 429ஐ எட்டிய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மே மாதத்தில் 442ஆக உயர்ந்த்து.  ஜூன் மாதத்தில் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 443 ஆக உயர்ந்தது.


ஆனால் தைவான் கொடுக்கும் ஆச்சரியங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்த 443 நோயாளிகளில் 430 பேர் குணமடைந்துவிட்டனர். 7 பேர் மட்டுமே கொரோனாவுக்கு பலியானார்கள்.. தற்போது 6 பேருக்கு மட்டுமே நோய்ப் பாதிப்பு உள்ளது.


இது தைவானின் கடின உழைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையின் விளைவாகும். இஸ்ரேல், நியூசிலாந்து போன்ற பல நாடுகள் தைவான் மாதிரியைப் புகழ்ந்து பேசுகின்றன. அமெரிக்காவை விட தைவான் சிறப்பாக செயல்பட்டது என்பதை அமெரிக்கவின் டைம் பத்திரிகை ஒப்புக் கொண்டது. வெற்றிபெறுவதற்கு நீங்கள் செல்வந்தராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வேலை செய்வதற்கும் சிந்தனை செய்வதற்கும் தேவையான திறமையே வெற்றியின் ரகசியம்.  அதற்கு இன்றைய சிக்கலான காலகட்டத்தில் தைவானின் செயல்பாடு உதாரணமாக இருக்கிறது. 


(மொழியாக்கம்: மாலதி தமிழ்ச்செல்வன்)