டெஹ்ரான்: இரானின் புரட்சிகர ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை தொடர்பாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட 30 பேரை கைது செய்ய இரான் கைது வாரண்டை பிறப்பித்துள்ளது.  சர்வதேச அளவில் இரானின் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இரானின் இந்த கோரிக்கையை இண்டர்போல் நிராகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரான் நாட்டு தலைவர் அயதுல்லா கொமேனிக்கு அடுத்த நிலையில் இருந்த குவாசிம் சுலைமானி, அந்நாட்டின் ராணுவத்தை வழிநடத்துபவர் என்று உலக நாடுகள் நம்பின. மத்திய கிழக்கு நாடுகளில் ஆயுத கிளர்ச்சி இயக்கங்களுக்கு உதவிய பயங்கரவாதி சுலைமானி என அமெரிக்கா கடுமையாக விமர்சித்துவந்தது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையும், பாக்தாத்தில் சுலைமானியை கொல்வதற்கான ட்ரோன் தாக்குதலை நடத்திய டஜன் கணக்கானவர்களையும் கைது செய்யவேண்டும் என்று இன்டர்போலிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக திங்கட்கிழமையன்று டெஹ்ரானில் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.


Also Read | லாக்டவுன் ஆகுமா தங்கத்தின் விலை?


சர்வதேச காவல் துறை (The International Criminal Police Organization - INTERPOL) சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பு ஆகும்.  184 உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இண்டர்போல், பல்வேறு நாடுகளின் காவல்துறைகளுக்கிடையான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் இயங்குகிறது. 


இரானின் கோரிக்கையை பரிசீலிக்கப் போவதில்லை என்று உடனடியாக இண்டர்போல் பதிலளித்துவிட்டது.  அதாவது அமெரிக்க அதிபர் கைது செய்யப்படுவார் என்ற கூற்று புறந்தள்ளப்பட்டது. ஆனால், உலகின் வல்லரசுகளுக்கும் இரானுக்கும் ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என்று டிரம்ப் ஒருதலைப்பட்சமாக அறிவித்ததில் இருந்து இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன.


இரான் இவ்வாறு அதிரடி கைது வாரண்டை வெளியிட்டாலும், செளதி அரேபியாவில் திங்கட்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இரானின் இந்த அறிவிப்பை அந்நாட்டுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி பிரையன் ஹூக் நிராகரித்தார்.


இந்த தடாலடி அறிவிப்பை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.  இதுவொரு பிரச்சார ஸ்டண்ட். இதுபோன்ற முட்டாள்த்தனமான நடவடிக்கைகள், இரானியர்கள் முட்டாள்கள் என்று நினைக்க வைக்கிறது என்று பிரையன் ஹூக் கூறினார்.


Also Read | தண்ணீருக்குள் தன்னை மறந்த நடிகை ஸ்ருதிஹாசனின் கவர்ச்சிப் புகைப்படங்கள்


குட்ஸ் படை என்பது இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையான ஐ.ஆர்.ஜி.சியின்  (Islamic Revolutionary Guard Corps (IRGC)) ஒரு பிரிவு ஆகும், இது வழக்கத்திற்கு மாறான போர் மற்றும் இராணுவ புலனாய்வு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றது.


பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஜனவரி மாதத்தில் நடைபெற்ற அதிரடி நடவடிக்கையில் புரட்சிகர காவல்படையின் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த சுலைமானி மற்றும் வேறு சிலரை அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றது. இதையடுத்து இரு நாடுகளுக்கிடையில் பல மாதங்களாக பதற்றமான சூழல் நிலவிவந்தது. 


Also Read | தப்லிகி ஜமாத் தலைவருக்கும் தாஹிர் உசேனுக்குமான தொடர்பு உண்மை: அமலாக்கத் துறை


கொரோனா பரவல் உலகம் முழுவதும் வியாபித்த நிலையில், இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றங்கள் மந்தமாகியிருந்தன. ஆனால் தற்போது இரான் அமெரிக்க அதிபர் மீது பிடிவாரண்ட் விதித்து, நிலைமையை மேலும் சூடாக்கியுள்ளது.


ஒரு கட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலால் யுத்த அபாயமும் ஏற்பட்டது.  தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய சர்வதேச போலீஸ்- இண்டர்போல் உதவ வேண்டும் என்ற இரானின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.  ஆனால் இதற்கு அமெரிக்கா வாய்மூடி மெளனியாக இருக்காது என்பதால் சர்வதேச அளவில் பதற்றமான சூழல் உருவெடுக்கும் என்பது நன்றாகவேத் தெரிகிறது.