பிரியங்கா காந்தி ஒரு மாதத்திற்குள் வீட்டை காலி செய்ய மத்திய அரசு உத்தரவு

டெல்லியில் உள்ள அரசு பங்களாவை பிரியங்கா காந்தி ஒரு மாதத்திற்குள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு SPG பாதுகாப்பை (எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்களின் பாதுகாப்பு) மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் திரும்பப் பெற்றுக் கொண்டது.
அதன் அடுத்தக்கட்டமாக டெல்லியில் பிரியங்கா காந்தி குடியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்ய செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதிக்குள் பிரியங்கா அரசு குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்று அவருக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
“இந்திய அரசு, சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பு SPG மற்றும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு ஆகிய பாதுகாப்பு வசதிகளை பிரியங்கா காந்திக்கு கொடுத்திருந்தது. இந்த பாதுகாப்புகள் கடந்த ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் திரும்பப் பெறப்பட்டது. எனவே, இனிமேல் பிரியங்கா காந்தி அரசு பங்களாக்களில் தங்க முடியாது. லோதி எஸ்டேட், எண் 6-பி பங்களாவில் தற்போது வசித்து வரும் பிரியங்கா காந்தியும் அவரது குடும்பத்தினரும் அரசு குடியிருப்பை காலி செய்யவேண்டும். மேலும் அங்கு குடியிருக்க அனுமதி கிடையாது. ஆகஸ்ட் முதல் தேதிக்குள் பிரியங்கா காந்தி அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும். ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு மேல் பிரியங்கா காந்தி அரசு பங்களாவில் தங்கியிருந்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
Read Also | Pierce Brosnan: ஜேம்ஸ் பாண்டாக தொடர்ந்து நடிக்கவில்லை என்பதால் வருத்தமில்லை
பிரமரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது SPG. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டில் தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து,1985-ம் ஆண்டு சிறப்பு பாதுகாப்புக் குழு SPG உருவாக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டில் சட்ட வடிவம் பெற்றது. SPG வில் உள்ள சுமார் 3,000 வீரர்கள் வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
1991ஆம் ஆண்டில் SPG சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதன்படி முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகள் வரை இந்தப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று விதிகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, நரசிம்ம ராவ், ஐ.கே.குஜ்ரால், தேவகெளடா என முன்னாள் பிரதமர்களுக்கு கொடுக்கப்பட்ட SPG பாதுகாப்பைத் திரும்பப் பெறப்பட்டது.
முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி குடும்பத்தினர் என்பதாலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்த காரணத்தினால் அவர்களுக்கான SPG பாதுகாப்பு தொடந்து கொடுக்கப்பட்டது.
Read Also | சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் குறைந்துள்ளது
கடந்த ஆண்டு, சோனியா காந்தியின் குடும்பத்திற்கு மட்டுமல்ல, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குடும்பத்தினருக்கு அளித்து வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பட்டது. அப்போது அதற்கு பதிலாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் Z+ (இசட்-பிளஸ்) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அப்போது, இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் அமளிகள் அரங்கேறின. எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, இதற்கு காரணம் அரசியல் தான் என்று தெரிவித்திருந்தார்.
தலைநகர் டெல்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர்கள்,பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்பி.க்களுக்கு டெல்லியில் அரசு பங்களா, விருந்தினர் மாளிகை ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால், இவர்கள் தங்கள் பதவிக் காலம் முடிந்த பின்னர் அல்லது அமைச்சரவை கலைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை. விதிமுறையை மீறினால் அவர்களுக்கு அரசு குடியிருப்பை காலி செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பப்படும் என்பது கூடுதல் தகவல்.