The GOAT Movie Trailer Decoding : விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் தி கோட் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் என்னென்ன சர்ப்ரைஸ்கள் நிறைந்திருக்கின்றன என்பதை பார்ப்போம்.
The GOAT Movie Trailer Decoding : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், அரசியலில் முழு நேரமாக இறங்குவதற்கு முன்பு, தி கோட் படத்திலும் தனது 69வது படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் தி கோட் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதில், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் படி பல விஷயங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதையும், வெங்கட் பிரபு படத்தில் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்கள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படத்தின் டிரைலர் நேற்று (ஆகஸ்ட் 17ஆம் தேதி) வெளியானது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
விஜய்யை, இப்படத்தில் டீன்-ஏஜ் கதாப்பாத்திரத்தில் காண்பிக்க, டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை உபயோகித்திருக்கின்றனர். இது, கிட்டத்தட்ட விஜய்யை சிறு வயதில் பார்ப்பது போலவே இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.
இந்த டிரைலரில், விஜய் தனது இளம் வயதில் நடித்தது முதல் சமீபத்தில் நடித்த படங்களின் அனிமேஷன் வரை அனைத்தும் இடம் பெற்றிருக்கின்றன. ரசிகன், பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, குஷி, பத்ரி, திருமலை, போக்கிரி, வேட்டைக்காரன், காவலன், வேலாயுதம் ஆகியவை அந்த படங்கள் என கூறப்படுகிறது.
தி கோட் படத்தின் டிரைலர், தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலும் வெளியானது. அந்த டிரைலர் கட்டில் ஒரு சில காட்சிகள் வேறு மாதிரியாக இருந்தன. குறிப்பாக, டிரைலரின் இறுதியில் விஜய் மிஷின் இம்பாசிபிள் படத்தின் பி.ஜி.எம்மை விசில் அடித்துக்கொண்டே வருவது இடம் பெற்றிருந்தது. ஆனால், தமிழில் அது இல்லை.
விஜய்யின் கோட் படத்தில், அஜித் நடித்து வெங்கட் பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ படத்தின் ரெஃபரன்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. உதாரணத்திற்கு விஜய் கண்ணாடியை பார்த்துக்கொண்டு பேசும் “இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது..” என்ற டைலாக்கை மங்காத்தா படத்தில் அஜித் பேசியிருப்பார்.
வெங்கட் பிரபு, கிரிக்கெட் ரசிகர். குறிப்பாக, ஐபிஎல் போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் அவர், இந்த படத்தில் CSK vs MI போட்டியை காட்சிக்காக வைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோட் டிரைலரில், விஜய் ஸ்டேடியத்தின் மேல் சண்டை போடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது.
அஜித்திற்கு பைக் சேசிங் மற்றும் சண்டை காட்சிகள் வைத்திருப்பது போல, விஜய்க்கும் தி கோட் படத்தில் பைக் சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி கோட் பட டிரைலர் இறுதிக்காட்சியில் விஜய், காதில் பூ வைத்துக்கொண்டு “மருதமலை மாமணியே முருகையா..தேவரின் குலம் காக்கும் வேலையா..” பாடலை பாடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இதை அவர், கில்லி படத்தில் ஏற்கனவே செய்திருக்கிறார்.