முக்தி தலமான காசி இந்துவாகிய ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது தரிசிக்க விரும்பும் கோவில்களில் ஒன்றான காசி ஒரு முக்தி தலமாகும். மோட்சத்தை கொடுக்கும் ஏழு தலங்களில் காசியும் ஒன்றாகும்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி என அழைக்கப்படும் காசியில் உள்ள மேம்படுத்தப்பட்ட விஸ்வநாதர் கோயில் வளாகத்தை, பிரதமர் இன்று திறந்து வைத்துள்ளார்.
காசி விஸ்வநாதர் ஆலயத்தை சுற்றி பழமை மாறாமல் பல புதிய சிறிய கோயில்களும் கட்டபட்டுள்ளன. இதன் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கங்கை நதிக்கரையான லலிதா படித்துறையையும், விஸ்வநாதர் கோயிலையும் இணைக்கும் 320 மீட்டர் நீளம் கொண்ட பாதை தான்.
கங்கை கரையுடன் நேரடியாக இணைக்கும் நடைபாதை, அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் இடங்கள், அரங்குகள், உணவு கூடங்கள் உள்பட 23 புதிய கட்டிடம் கொண்ட வளாகத்தை பக்தர்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் திறந்து வைத்தார்.
ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தின் முதல் கட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். கங்கையில் நீராடி, புனித நீரை எடுத்துச் சென்று கோயிலில் வழங்குவது தொன்று தொட்டு நடந்து வந்த வழக்கமாகும்.
3,000 சதுர அடி என்ற மிகச் சிறிய அளவில் இருந்த ஆலய வளாகத்தை பல்வேறு சிறப்புக்களுடன், விரிவாக்க திட்டமிடப்பட்டது. வாரணாசி தொகுதியின் மக்களவை உறுப்பினரான பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாகவே இந்த திட்டம் பார்க்கப்பட்டது. இந்த வளாகம் தற்போது 5,00,000 சதுர அடியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.