Ornament Gold Buying: நகை வாங்க விரும்பாத பெண்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அதிலும் தங்க நகை என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால், விலை அதிகமாகிக் கொண்டிருக்கும் தங்க நகையை வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும்
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், தங்கத்தில் நகை வாங்குவதும் விலை உயர்ந்ததாக மாறிவிட்டது. எனவே பொன்னகை வாங்கும்போது முகத்தில் புன்னகை இருக்க வேண்டுமானால் சில முக்கிய விஷயங்களை தெரிந்துக் கொள்ளவும்
தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் அல்லது பார்கள் போன்றவற்றைப் போலல்லாமல், நகைகள் என்பது நீங்கள் பெருமையுடன் அணியக்கூடியது. தலைமுறைகள் கடந்து செல்லக்கூடிய இந்த முதலீட்டை அதாவது தங்க நகை வாங்குபவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை.
கடையில் நகை வாங்கும்போது, நகையின் மொத்த விலையில் செய்கூலி சேதாரம் சேர்த்து இருக்கும். தங்கப் பொருட்களுக்கான உற்பத்தி செயல்முறை உழைப்பு அதிகம் பிடிக்கும் என்பதால், கட்டணங்கள் அதிகமாக இருக்கிறது. நகை செய்யும் வடிவமைப்பாளரின் படைப்பாற்றல் மற்றும் ஒவ்வொரு நகையை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் கைவினைஞர்களின் முயற்சியும் நகை விலையை அதிகரிக்கிறது. தங்கத்தின் உண்மையான மதிப்பை விட 8-10% அதிகமாக விலை இருந்தால் அது சரியானது.
ஹால்மார்க்கிங் என்பது தொழில்துறையின் சிறந்த நடைமுறை மற்றும் தங்கம் வாங்குவதற்கான முக்கியமான குறிப்புகளில் ஒன்றாகும். இது நம்பகத்தன்மை மற்றும் உற்பத்தியாளரின் தரத்தை உறுதி செய்கிறது. நீங்கள் வாங்க விரும்பும் ஆபரணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தங்கத்தின் தூய்மையை இது சான்றளிக்கிறது. தங்கக் கலவையானது சர்வதேச ஹால்மார்க்கிங் மாநாட்டின் பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்கு மேல் விலைமதிப்பற்ற உலோகத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்தியாவில், BIS (Bureau of Indian Standards) இந்திய அரசின் விதிமுறைகளின்படி தங்கத்தின் சான்றிதழை ஒழுங்குபடுத்துகிறது. ஆபரணங்களில் ஹால்மார்க் சான்று இருப்பது கட்டாயம். இது, ஸ்டாம்பிங் அல்லது லேசர் பொறித்தல் மூலம் செய்யப்படுகிறது. தங்க நகை வாங்கும் முன், அதில் ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
தங்கம் வாங்கும்போது அதன் தூய்மையை மதிப்பிடுவது அவசியமானது. நீங்கள் வாங்கும் தங்க ஆபரணங்களும் நகைகளும், நாணயத் தங்கம் மற்றும் பிற உலோகங்களின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. உலோகக் கலவையில் உள்ள தங்கத்தின் சதவீதமே அதன் தூய்மையைத் தீர்மானிக்கிறது. தங்கத்தின் தூய்மை காரட் என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது. 24K அல்லது 999+/-50 Parts Per Thousand (PPT) என்பது தங்கத்தின் தூய்மையின் மிக உயர்ந்த வடிவமாகும். அனைத்து வகையான தங்கத்தின் தூய்மையும் இந்த தரத்துடன் ஒப்பிடும் வகையில் இந்த தரம் நிர்ணயம் செய்யபப்ட்டுள்ளது.
தங்கத்தின் தேவை, இறக்குமதி செலவுகள் மற்றும் பல்வேறு காரணிகளால் ஒவ்வொரு நகரத்திலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது. போக்குவரத்து செலவு, கட்டணங்கள், வரிகள் மற்றும் அதை வாங்குவதில் உள்ள பிற கட்டணங்கள் என பல காரணிகள், ஒவ்வொரு ஊரிலும் அன்றைய தங்கத்தின் விலையை தீர்மானிக்கிறது. உதாரணமாக, துறைமுக நகரங்களில் தங்கத்தின் விலை குறைவாக இருக்கும். ஒவ்வொரு நகரத்திலும் தங்கத்தின் விலை, காலை மற்றும் மாலை என ஒரு நாளைக்கு இரண்டு முறை புதுப்பிக்கப்படும். ஆபரணங்களைத் தயாரிப்பதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான கூலியும் நகரத்துக்கு நகரம் வேறுபடும். தங்கம் வாங்குவதற்கு முந்தைய நாளின் தங்கத்தின் விலையை அறிந்து கொள்வது அவசியம்.
தங்கத்தை உருக்கி வெட்டி ஆபரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் வித்தியாசமான டிசைனில் நகை வேண்டுமென்றால், அதில் சேதாரம் அதிகமாகிறது. அதனால் தான், வேறு எந்த பொருளிலும் இல்லாத ‘சேதாரம்’ என்ற வார்த்தை, நகைக் கடைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நகைக்கடைக்காரர்கள் இந்தத் தொகையை உங்கள் நகையின் மொத்தச் செலவில் கட்டணமாகச் சேர்க்கிறார்கள். தங்க நகைகளை உற்பத்தி செய்வதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நகையில் சேதாரம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது
நகையில் கற்கள் பொருத்தப்பட்ட டிசைனை தேர்ந்தெடுத்தால், அதற்கு செய்கூலியும் சேதாரமும் அதிகமாகும். அதோடு, கற்கள் இல்லாத ஆபரணங்களைவிட இதன் விலை அதிகமாக இருக்க வேண்டும்
நுணுக்கமான வேலைப்பாடு கொண்ட நகைகளை வாங்கும்போது, ஒன்றுக்கு இரு முறை சரிபார்த்துக் கொள்ளவும். ஏனென்றால், அவை நாசூக்கானவை, விரைவில் சேதமடைய வாய்ப்புகள் அதிகம்
பழைய நகையை திரும்பக் கொடுத்தால், எந்த விலைக்கு எடுத்துக் கொள்வார்கள் என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது. அதிலும், நகைக்கு பதில் புதிய நகை வாங்குவதற்கும், பணமாய் திரும்ப வாங்குவதற்கும் வித்தியாசம் உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ளவும்