திருமணமான ஆண்கள் தங்கள் மனைவி முன் மாமியாரை திட்டினால் அதற்கு என்னென்ன மாதிரியான விளைவுகள் வரும் என தெரிந்து கொள்ளுங்கள்
திருமணமானவுடன் கணவன், தங்களின் அம்மா, அப்பாவை எப்படி மரியாதையாக நடத்துகிறார்கள் என மனைவி கவனிப்பார். மனைவியின் பெற்றோர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் ஒரே மாரியாக நடந்து கொள்ளும் கணவர்களுக்கு பிரச்சனை இல்லை.
ஆனால் உங்களுக்கும் மனைவிக்கும் இடையே ஏதேனும் மன வருத்தம் ஏற்படும்போது மனைவியை திட்டுவதற்காக மாமியாரை வைத்து வசைபாட ஆரம்பித்தால் அங்கு தான் பிரச்சனையின் பூகம்பம் வெடிக்க தொடங்கும். இப்படியான அணுகுமுறை உங்களின் திருமண உறவுக்கே ஆபத்தாகவும் வாய்ப்பு இருக்கிறது.
மனைவியை சீண்டுவதற்காக மாமியாரை ஆண்கள் திட்டுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் அப்படி செய்வதை பெண்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. மாமியாரை விமர்சிப்பது மனைவியின் மன உறுதியை பாதிக்கும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும், அவளுடைய பெற்றோருக்கு அவளுடைய வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் உண்டு. அவர்களுடன் குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாக கழித்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில், கணவர் மாமியாரை வேண்டுமென்றே திட்டுவதை மனைவியால் சகித்துக் கொள்ளவே முடியாது.
கோபத்தை பொறுத்துக் கொள்ள முடியாத பெண்கள் உங்களின் மாமியாரிடமே நீங்கள் என்னவெல்லாம் பேசினீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்படி சொல்லிவிட்டால் உங்களின் உறவு சுமூகமானதாக இருக்காது.
நீங்கள் மாமியாரை திட்டும்போது மனைவியும் பதிலுக்கு உங்களின் பெற்றோரை சகட்டுமேனிக்கு திட்ட வாய்ப்பு இருக்கிறது. உங்களால் உங்களின் பெற்றோருக்கும் சங்கடம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவர்களின் மரியாதையும் சேர்த்து பாதிக்கப்படும்.
மாமியாரை வைத்து திட்டும்போது மனைவி அதீத கோபத்துக்கு செல்லலாம். இதனால் அவர் விபரீதமான செயல்களில் ஈடுபடக்கூட வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் நீங்களும் கோபத்தில் இருப்பதால் மனைவியின் ஆற்றாமையை உங்களால் கட்டுப்படுத்தவும் முடியாது. இது குடும்பத்தின் மகிழ்ச்சியை முற்றிலுமாக சீர்குலைக்க வாய்ப்பு உள்ளது.
கணவன் மனைவி சண்டைக்கு இடையில் மாமியாரை வைத்து புதிய சண்டை உருவானால், பிரச்சனை இன்னும் பெரிதாகவே வாய்ப்பு இருக்கிறது. அதனால் நிரந்தரமாக குடும்பம் பிரியக்கூடிய சூழல் உருவாகலாம்.
நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதே தான் உங்களுக்கும் முடிவாக கிடைக்கும். திருமண உறவில் எல்லாமே பதிலுக்கு பதில் கிடைக்கும் என்பதால் எந்த நேரத்திலும் நிதானத்துடன் பேசுவது, செயல்படுவது அவசியம்.
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் கோபம் வரக்கூடிய நேரங்களில் அமைதி, நிதானம் கடைபிடிப்பது அவசியம். இந்த பொறுமையே உங்கள் வீட்டில் மீண்டும் மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கான வழி என்பதில் தீர்க்கமாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.